Published : 16 Jun 2023 05:25 PM
Last Updated : 16 Jun 2023 05:25 PM
தஞ்சாவூர்: கும்பகோணம் கோட்டாட்சியர், வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்.ஐ ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருவிடைமருதூர் வட்டம், மாத்தூரில் கடந்த 11-ம் தேதி லாரியில் அனுமதியின்றி சவுடு மணல் கடத்துவதாக நாச்சியார்கோயில் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து காவல் நிலையத்தில் பணியிலிருந்த எஸ்.ஐ ஈஸ்வரன், அங்குச் சென்று லாரியை பறிமுதல் செய்தார்.
இது குறித்து நாச்சியார்கோயில் கிராம நிர்வாக அலுவலர் சங்கர், நாச்சியார்கோயில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், லாரி உரிமையாளரான அதிமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி சார்லஸ், லாரி ஓட்டுநர் முருகேசன், உதவியாளர் சிவமூர்த்தி ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையிலடைத்தனர்.
இது தொடர்பாக அன்றே, கும்பகோணம் வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரனிடம், செல்போனில் பேசிய எஸ்.ஐ ஈஸ்வரன், சவுடு மணல் கடத்திய லாரி மற்றும் 3 பேரைக் கைது செய்துள்ளோம். ஆனால் வருவாய்த் துறை அலுவலர்கள் புகாரளிக்க வில்லை என்று கூறியதும், ஏன் நீங்களே வழக்குப் பதிந்து கொள்ள வேண்டியதானே என வட்டாட்சியர் தெரிவித்தார்.
அதற்கு எஸ்ஐ ஈஸ்வரன், அதனை எழுத்துபூர்வமாகக் கொடுங்கள் எனக் கூறியதும், ஆய்வாளரிடம் பேசிக்கொள்ளுங்கள் என வட்டாட்சியர் பேசிக்கொண்டிருந்த போது, இந்த காவல் நிலையத்திற்கு இப்போது நான் தான் ஆய்வாளர் என்றார். என்னிடம் சண்டைக்கு வரீங்களா என 2 பேரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கோட்டாட்சியரிடம் பேசிக்கொள்கிறேன் என எஸ்ஐ போனை துண்டித்தார்.
பின்னர், கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமாவிடம் செல்போனில் பேசிய எஸ்ஐ ஈஸ்வரன், வட்டாட்சியர் என்னையே வழக்குப் பதிந்து கொள்ளுங்கள் என்கிறார். மேலும், வருவாய்த் துறையினர் சுமார் 6 மணி நேரத்திற்குப் பிறகு புகாரளித்துள்ளனர். அதில் குற்றவாளியின் பெயரைச் சேர்க்காமல், அவர்களுக்கு சாதகமாகச் செயல்படுகிறார் என்றதும் 2 பேரும் மாறி மாறி பேசிக்கொண்டிருந்த போதே, தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இவர்கள் செல்போனில் பேசிக்கொண்ட பதிவுகள் வைரலாகப் பரவியதையடுத்து, வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் இச்சம்பவம் குறித்து புகாரளித்துள்ளார். மேலும், இதனையறிந்த எஸ்பி ஆசீஷ் ராவத், அதிரடியாக எஸ்.ஐ ஈஸ்வரனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT