Published : 16 Jun 2023 05:06 PM
Last Updated : 16 Jun 2023 05:06 PM
சென்னை: அரிசிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விடவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கேரளாவில் இருந்து தமிழகத்தின் கம்பம் பகுதிக்கு வந்த அரிசிக்கொம்பன் யானையைப் பிடித்த வனத்துறை, அதனை திருநெல்வேலி மாவட்டத்த்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் விட்டது.அங்கு போதுமான உணவு, தண்ணீர் இல்லை என்பதால், மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் அரிசிக்கொம்பனை விடக் கோரி கேரளாவைச் சேர்ந்த ரெபேக்கா ஜோசப் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், "அரிசிக்கொம்பன் யானையை ரவுடி யானை போல இழிவாக சித்தரித்து செய்திகள் வெளியிடப்படுகிறது. எனவே, அதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில், “களக்காடு - முண்டந்துறையில் யானை நலமாக உள்ளது. அதன் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், யானையை எங்கு விட வேண்டும் என முடிவு செய்ய வனத் துறையினரே நிபுணத்துவம் பெற்றவர்கள். எனவே, இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்று கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
அப்போது, ஊடகங்களில் யானையை ரவுடி யானை என செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வைத்த கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்திய பிரஸ் கவுன்சில் மற்றும் ஊடகங்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து வழக்கு தொடரலாம் எனவும், இந்த வழக்கில் பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT