Published : 16 Jun 2023 05:38 PM
Last Updated : 16 Jun 2023 05:38 PM

ரேஷன் கடைகளில் இரட்டை ரசீது முறையில் மாற்றம்

திருச்சி: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இரட்டை ரசீது போடும் முறையில் மக்கள் காத்திருப்பு நேரத்தை தவிர்க்க பிஓஎஸ் இயந்திரத்தில் புதிய அப்டேட் செய்யப்பட்டு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் முன்னுரிமை (பிஎச்எச்) மற்றும் அந்தி யோதயா அன்னயோஜனா திட்ட (ஏஏஒய்) ரேஷன் அட்டைகளுக்கு இருமுறை ரசீது போடும் முறை கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

இதில் முன்னுரிமை (பிஎச்எச்) மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா (ஏஏஓய்) ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யும் போது அரிசிக்கு மட்டும் முதல் ரசீதை மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 2-வது ரசீதை மாநில அரசு ஒதுக்கீட்டிலும் என பிரித்து இரு முறை பிஓஎஸ் இயந்திரத்தில் ரசீதுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதனால், ரசீது போடுவதற்கு காலதாமதம் ஏற்படுவதாக ரேஷன் கடை பணியாளர்கள் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் 21.1.2023 அன்று விரிவான செய்தி பிரசுரமானது. இந்தநிலையில், இரட்டை ரசீது போடும் முறையில் உள்ள காலதாமதத்தை தவிர்க்க பிஓஎஸ் இயந்திரத்தில் புதிய அப்டேட்டை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது.

பா.தினேஷ்குமார்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.தினேஷ்குமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:இந்த இரட்டை ரசீது போடும் முறையால் ஏற்படும் காலதாமதத்தால், பொதுமக்களுக்கும், ரேஷன் கடை பணியாளர்களுக்கும் தினந்தோறும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்த முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்கள் முதியவர்கள்தான்.

இவர்களிடம் ஒரு முறை கைரேகை பெற்று ரசீது போடுவதே சிரமமான காரியமாக இருந்தது. இதில் இரு முறை ரேகை பெற்று ரசீது போடுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே இரட்டை ரசீது முறையை கைவிட வேண்டும் என அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதன் பின்னர், பிஓஎஸ் இயந்திரத்தில் இரட்டை ரசீது போடும்போது ஏற்பட்ட 5 நிமிட காலதாமதம் அண்மையில் 2 நிமிடங்களாக குறைக்கப்பட்டது.

தற்போது இந்த 2 நிமிட தாமதமும் ஏற்படாத வகையில் பிஓஎஸ் இயந்திரத்தில் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால், நேற்று முதல் முதல் ரசீது போட்டவுடனேயே 2-வது ரசீதை போடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக உணவுத் துறை அமைச்சர், துறையின் ஆணையர் ஆகியோருக்கும், இந்த பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x