Last Updated : 16 Jun, 2023 03:14 PM

13  

Published : 16 Jun 2023 03:14 PM
Last Updated : 16 Jun 2023 03:14 PM

தமிழகத்தில் குறைவான இடைவெளியில் கூடுதல் சுங்கச்சாவடிகள் அமைத்து வசூல் வேட்டை!

கள்ளக்குறிச்சி: ‘60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட வேண்டும்’ என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ள நிலையில், 40 கி.மீக்குள் சுங்கச்சாவடிகள் அமைத்து, முறைகேடான வசூலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘சாலை வரியை செலுத்தித் தான் வாகனம் வாங்குகிறோம். பிறகு எதற்கு சுங்கக் கட்டணம்?’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். அதற்கு நெடுஞ்சாலைத்துறையினர், “நீங்கள் கட்டும் வரி மாநில சாலைகளுக்கு. ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்” என்று விளக்கம் அளிக்கின்றனர்.

அவர்களின் விளக்கத்தின்படியே, தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் அல்லது அந்த நெடுஞ்சாலைகளை அமைக்க செலவு செய்யப்பட்ட முதலீட்டை திரும்பப் பெறும் வரை முழுமையான சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும். அதன் பிறகு பராமரிப்பு செலவுக்கு குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது பொதுவான விதி. ஆனால் அது நடைமுறையில் பின்பற்றப்படுகிறதா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

நடைமுறையில் இருப்பது என்ன? - ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணம் குறிப்பிட்டத் தேதியில் உயர்த்தப்பட்டு, வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்துநேரடியாக எடுத்துக் கொள்ளும் நிலை தான் தற்போது வரை தொடர்கிறது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் அவ்வப்போது சுங்கச்சாவடிகளின் வசூல் உயர்வு மேலும் பாதிப்படைய வைக்கிறது.

இது ஒருபுறமிருக்க, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச் சாவடிக்கும், உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடிக்குமான இடைவெளி 48 கி.மீ உள்ளது. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பில்லூர் அருகே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சென்னையில் இருந்து சேலம் செல்லும் வாகனங்களிடம் வசூலிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கும், கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் சுங்கச்சாவடிக்குமான இடைவெளி 39 கி.மீ மட்டுமே. கள்ளக்குறிச்சி நகருக்குள் செல்லும் வாகனங்களிடம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே குறைந்த இடைவெளியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வீரசோழபுரம் சுங்கச்சாவடிக்கும், சேலம் மாவட்டம் நத்தக்கரை சுங்கச்சாவடிக்குமான இடைவெளி 42 கி.மீ மட்டுமே.

இதுதவிர கடலூர் - சேலம் 532 தேசிய நெடுஞ்சாலையில் பொன்னாலகரம் மற்றும் கீழக்குறிச்சி ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. கடலூரில் இருந்து சேலம் நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கீழக்குறிச்சி சுங்கச்சாவடியில் ஒரு கட்டணத்தை செலுத்திவிட்டு, அடுத்த 22 கி.மீட்டர் தொலைவில் நத்தக்கரை சுங்கச்சாவடியிலும் கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

“இதுபோன்ற முறையற்ற கட்டண வசூல் பற்றி எந்த அரசியல் கட்சியினரும் வாய் திறப்பதில்லை” என்று ஆதங்கப்படுகிறார் நெய்வேலி லாரி உரிமையாளர் ஸ்ரீராம். ‘60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் என்றும், அதற்கு குறைவான தொலைவில் 2-வது சுங்கச்சாவடி இருந்தால் அடுத்த 3 மாதங்களில் அது மூடப்படும்’ என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறி 2 ஆண்டுகள் ஆகின்றன.

ஆனால் இதுவரை அதுபோன்று எந்த சுங்கச்சாவடியும் அகற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தியாவில் அதிகளவு சுங்கச்சாவடிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. “60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்றால் தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்துவோம்” என்று அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் அறிவித்தார்.

‘ஒவ்வொருவரும் அவரவர் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். சுங்கச்சாவடிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ளவில்லை” என்கிறார் கடலூர் மாவட்ட வாகன உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கிரகோரி.

தாம்பரம் - திண்டிவனம் இடையில் நான்கு வழிச்சாலை 1999-ம் ஆண்டு தொடங்கி 2004-ல் முடிக்கப்பட்டு 2005 ஏப்ரல் முதல் இந்தச் சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தச்சாலை அமைக்க ஆன செலவு ரூ.536 கோடி. ஆனால் கடந்த 18 ஆண்டுகளில் சுங்கக் கட்டணம்வசூலித்தது ரூ.2,000 கோடிக்கும் அதிகம்.

இந்தச் சுங்கச்சாவடியில் இன்னும் முழு கட்டணத்தை வசூலிப்பது வழிப்பறி கொள்ளையை விட மோசமானதாக இருக்கிறது என்பது கனரக வாகன உரிமையாளர்களின் குரலாக உள்ளது.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் ஒருவர் கூறுகையில், “புதிதாக எந்த ஒரு சுங்கச் சாவடிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது இயங்கி வரும் அனைத்து சுங்கச்சாவடிகளும் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி பெற்று இயங்கி வருகின்றன” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x