Published : 16 Jun 2023 01:55 PM
Last Updated : 16 Jun 2023 01:55 PM
சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன.
இதனால், திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே இருந்த ரயில்வே கடவுப் பாதை அடிக்கடி மூடப்பட்டு வந்தது. இதன் காரணமாக, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, கந்தன்கொல்லை, அயத்தூர், சிவன்வாயில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கள் பணியிடம், பள்ளி, கல்லூரிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை இருந்தது.
இதனால், வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வேயும், மாநில நெடுஞ்சாலை துறையும் இணைந்து, சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின்கீழ், வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
ரூ.29.50 கோடி மதிப்பிலான இந்த மேம்பால பணியில், ரயில்வே கடவுப் பாதை அகற்றப்பட்டு, ரயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியின் பெரும்பகுதியை கடந்த 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் ரயில்வே நிர்வாகம் மேற் கொண்டு முடித்துள்ளது. ஆனால், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணியில், முதல் கட்டமாக ரயில்வே கடவுப் பாதையின் ஒரு புறமான பெருமாள்பட்டு பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு மேம்பால பணிகள் நடந்தன.
இந்நிலையில், கடவுப் பாதையின் மற்றொரு புறமான வேப்பம்பட்டு, சென்னை–திருப்பதி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலத்தின் 2-ம் கட்ட பணிகளை நெடுஞ்சாலைத் துறை கடந்த 2012-ம் ஆண்டு தொடர்ந்தது. இதில், சுமார் 5 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு வந்த நிலையில், ரயில்வே மேம்பால பணிக்கு எதிராகவேப்பம்பட்டு, டன்லப் நகர் பகுதிகளை சேர்ந்த 2 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணை அடிப்படையில், கடந்த 2013-ம் ஆண்டு வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, மேம்பால பணி நிறுத்தப்பட்டது. மேம்பால பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை நெடுஞ்சாலைத் துறை கடந்த 2014 மார்ச் மாதத்தில் ரத்து செய்தது.
பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டதால், மேம்பால பணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், வழக்கை வாபஸ் பெற்றனர். கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில், மேம்பால பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. இவ்வாறு தடை நீக்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை இன்னும் தொடங்காமல் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஆர்வலர்கள் கூறியதாவது:
திருவள்ளூர் வட்ட நுகர்வோர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க தலைவர் கவுரி சங்கர்: வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணிக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கிய பின்பும், பணி கிடப்பில் உள்ளது. ரயில்வே கடவுப் பாதையின் இருபுறமும் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதுதான் இதற்கு காரணம்.
முன்னாள் அரசு ஊழியர் இளங்கோவன்: பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு பகுதிகள் மட்டுமின்றி, திருமழிசை, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடி பகுதிகளுக்கு இப்பகுதி மக்கள் செல்லும் வழியாகவும் வேப்பம்பட்டு ரயில்வே கடவுப் பாதை இருக்கிறது. இந்த சூழலில், ரயில்வே மேம்பால பணி கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
சமூக ஆர்வலர் துரை: மாணவ, மாணவிகள், பொதுமக்கள், ஆபத்தான முறையில் ரயில் பாதையை கடந்து செல்கின்றனர். இதனால், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மேலும், மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லவேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள், கர்ப்பிணிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் சுமார் ஒரு கி.மீ., தூரத்தில் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள மற்றொரு ரயில்வே கடவுப் பாதையை கடந்து அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும்.
எப்போது தயாராகும்? - நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘ரயில்வே கடவுப் பாதையின் இருபுறமும் மேம்பால பணிக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது. அந்த நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கும் பணியை வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பணி முடிந்து, உரியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படும். தொடர்ந்து, புதிய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, மறு டெண்டர் விடப்பட்டு மேம்பால பணி தொடங்கப்படும். தொடங்கி ஓராண்டுக்குள் பணி முடிக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT