Published : 16 Jun 2023 02:37 PM
Last Updated : 16 Jun 2023 02:37 PM

75 ஆண்டுகள் கனவு நனவானது - நீலகிரியில் பழங்குடியினர் கிராமத்துக்கு கிடைத்தது தார் சாலை!

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள யானைப்பள்ளம், சின்னாளகோம்பை பழங்குடியினர் கிராமங்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப்பின் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பழங்குடியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் பில்லூர்மட்டம், சின்னாளகோம்பை, யானைப்பள்ளம், சடையன் கோம்பை, குரங்குமேடு ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள், உலிக்கல் பேரூராட்சியின் 14-வது வார்டுக்கு உட்பட்டவை. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள், தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக 6 கிலோ மீட்டர் நடைபயணமாக பில்லூர் மட்டம் வரை வர வேண்டியிருந்தது.

மேற்காணும் கிராமங்களுக்கு செல்லும் மண் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால்ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிக்கல் இருந்தது. நோயாளிகள்மற்றும் கர்ப்பிணிகளை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. யானைப்பள்ளம், சடையன்கொம்பை, சின்னாளகொம்பை ஆகிய பகுதிகளில் கடந்த 2019-ம் ஆண்டு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலை 5 மணிக்கு சின்னாள கோம்பை கிராமத்தில் மின்னல் தாக்கி சிறுவன் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

மழை பெய்ததால் சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டதால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மறுநாள் பல்வேறுசிரமங்களுக்கு மத்தியில் 12 பேரும், குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனவே யானைப்பள்ளம், சடையன்கோம்பை, சின்னாள கோம்பை பழங்குடியின கிராமங்களுக்கு செல்லும் மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் உலிக்கல் பேரூராட்சி சார்பில் பில்லூர் மட்டம் முதல் யானைப்பள்ளம் வரையில் 8 கி.மீ. சாலையை சீரமைக்க ரூ.8 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக பில்லூர் மட்டத்திலிருந்து தார் சாலை அமைக்க 1.2 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.

யானைப்பள்ளம் வரை சாலையில் உள்ள பள்ளங்கள் மூடப்பட்டு, சமன் செய்யப்பட்டது. கரோனா பரவல், நிர்வாக சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீண்ட இழுபறிக்கு பின்னர் தொடங்கிய தார் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது எங்கள் கிராமங்களுக்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாததால் 6 கி.மீ. நடைபயணமாக பில்லூர் மட்டம் வந்து, அங்கிருந்து பேருந்து மூலம் உலிக்கல் பேரூராட்சி மற்றும் குன்னூருக்கு செல்ல வேண்டும்.

மாலை நேரமாகிவிட்டால், பில்லூர் மட்டத்தில் பேருந்து இருக்காது. இதனால் சேலாஸில் உள்ள நிழற்குடையில் தங்கி, காலையில் பில்லூர் மட்டம் சென்று, அங்கிருந்து வீடுகளுக்கு நடந்து செல்லும் நிலை இருந்தது. தற்போது தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், அரசுப் பேருந்து சேவை ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x