Published : 16 Jun 2023 01:16 PM
Last Updated : 16 Jun 2023 01:16 PM
காஞ்சிபுரம்: கோயில்கள் மட்டுமின்றி, தொழிற்சாலைகளும் நிறைந்த மாவட்டம் காஞ்சிபுரம். இங்குள்ள சுங்குவார்சத் திரம், ஸ்ரீ பெரும்புதூர், ஒரகடம், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் காஞ்சிபுரம் நகரிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் தங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் நகரில் வசிக்கும் தொழிலாளர்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் காஞ்சிபுரம்–பொன்னேரிக்கரை சாலையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். சென்னை, பெங்களூரு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த சாலை வழியாகத்தான் பேருந்துகள் செல்கின்றன.
மேலும் காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருப்பவர்கள் இந்த சாலையை பயன்படுத்திதான் காஞ்சிபுரம் நகரப் பகுதிக்கு வரவேண்டும். அங்கிருந்து ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்கின்றனர். இந்த நிலையில், அதிகமானோர் இந்த சாலையை பயன்படுத்துவதால், போக்குவரத்து நெரிசலை குறைக்க காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே ஒரு மேம்பாலம் அமைக்கப்பட்டதுடன், சாலையும் சீரமைக்கப்பட்டது.
இந்த சாலையில் மின் விளக்குகளும் போடப்பட்டன. ஆனால், இதில் பெரும்பாலான மின் விளக்குகள் எரிவது இல்லை.
இந்த சாலையில் 50-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் எரியாததால், இப்பகுதி இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக, விபத்துகள் ஏற்படுகின்றன. இருளில் மறைந்திருப்பவர்கள் மூலம் வழிப்பறி சம்பவங்கள், கஞ்சா விற்பனை, அடிதடி போன்ற சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், இரவு நேரங்களில் பெண்கள் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வது சவாலானதாக உள்ளது என்றும் கூறுகின்றனர். இப்பகுதியில் போடப்படும் மின் விளக்குகள் அடிக்கடி பழுதாகின்றன. எனவே, அதற்கான காரணங்களை முறையாக ஆராய்ந்து, மின் விளக்குகளை பொருத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகினறனர். சமூக ஆர்வலர் அ.தினேஷிடம் இது குறித்து கேட்டபோது, ‘‘காஞ்சிபுரம்–பொன்னேரிக்கரை சாலையில் மின் விளக்குகள் சரிவர எரிவது இல்லை. இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அது மட்டுமின்றி, இந்த சாலையையொட்டி குப்பை, இறைச்சிக் கழிவுகளை பலரும் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதி
யில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இந்த சாலையை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘இந்த சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ள பகுதி கோனேரிக்குப்பம் ஊராட்சியில் வருகிறது. எஞ்சிய பகுதிகள் நெடுஞ்சாலைத் துறையில் வருகிறது. எந்தெந்த பகுதிகளில் விளக்குகள் சரிவர எரிவது இல்லை என்பதை ஆய்வு செய்து, அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
குப்பையை சாலையோரம் கொட்டக் கூடாது என்றும் எச்சரிக்கப்படும்’’ என்றார். காஞ்சிபுரம்–பொன்னேரிக்கரை சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் கூறப்படுவது குறித்து காஞ்சிபுரம் துணை கண்காணிப்பாளர் ஜீலியஸ் சீசரிடம் கேட்டபோது, ‘‘இதுதொடர்பாக எங்களிடம் எந்த புகாரும் வரவில்லை. அவ்வாறு சம்பவங்கள் நடந்தால், பொதுமக்கள் காவல் துறையை நாடலாம். புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.சென்னை –பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் காஞ்சிபுரம் –பொன்னேரிக்கரை சாலை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT