Last Updated : 16 Jun, 2023 01:15 PM

 

Published : 16 Jun 2023 01:15 PM
Last Updated : 16 Jun 2023 01:15 PM

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் முக்கிய சாலைகளில் தொடரும் மதுக்கடைகள்: மத்திய உள்துறை அமைச்சருக்கு அதிமுக கடிதம்

புதுச்சேரி: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் முக்கிய சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அரசு அகற்றாததால் மத்திய உள்துறை அமைச்சருக்கு அதிமுக புகார் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதம்: 'கடந்த 20.3.2023ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் புதுச்சேரியில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி முக்கிய சாலைகளில் மது விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

இந்த சாலைகளில் இருக்கக்கூடிய மது விற்பனை உரிமத்தை உடனடியாக 4 வாரத்தில் இடமாற்றம் செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் அந்த உத்தரவின்படி, நகராட்சி எல்லைக்குள் இந்த சாலைகள் இருந்தாலும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும். தேசிய, மாநில, நகராட்சி முக்கிய சாலைகளின் இருபுறத்திலிருந்தும் 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள புதுச்சேரியில் உள்ள தேசிய, மாநில மற்றும் நகராட்சி முக்கிய சாலைகளில், என்.எச் 45 ஏ புதுவை- மதகடிப்பட்டு எல்லை முதல் முள்ளோடை எல்லை வரை, என்.எச் 66 புதுவை இந்திராகாந்தி சதுக்கம் முதல் கோரிமேடு எல்லை மாநில நெடுஞ்சாலை வரை, கணபதி செட்டிகுளம் முதல் பிள்ளைச்சாவடி வரை(கிழக்கு கடற்கரை சாலை), கருவடிகுப்பம் முதல் ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் வரை(கிழக்கு கடற்கரை சாலை), லால்பகதூர் சாஸ்திரி வீதி, எஸ்.வி.படேல் சாலை, காமராஜர் சாலை, அண்ணா சாலை, பாரதி வீதி, சின்ன சுப்பராயப்பிள்ளை வீதி, முகமது காசிம் சாலை, செஞ்சி சாலை, மறைமலையடிகள் சாலை, திருவள்ளுவர் சாலை, ஆம்பூர் சாலை, உப்பளம் அம்பேத்கர் சாலை,

வெங்கடசுப்பாரெட்டியார் சதுக்கம் முதல் மரப்பாலம் சந்திப்பு வரையுள்ள சாலை, மகாத்மா காந்தி சாலை, ஜவகர்லால் நேரு வீதி, மிஷன்வீதி மெயின் சாலை, கருவடிக்குப்பம் மெயின்ரோடு, ஏழை மாரியம்மன் கோவில் மெயின் ரோடு, கடலூர் மெயின்ரோடு, லெனின் வீதி, வில்லியனூர் மெயின்ரோடு, திருக்காஞ்சி மெயின்ரோடு, வில்லியனூர் முதல் பத்துகண்ணு வரையுள்ள மெயின்ரோடு, பத்துக்கண்ணு முதல் திருக்கனூர் வரை சோரப்பட்டு வழி செல்லும் சாலை, ராஜீவ்காந்தி சதுக்கம் முதல் திருக்கனூர் மெயின்ரோடு வரை, மதகடிப்பட்டு முதல் திருக்கனூர் வரை மெயின்ரோடு, திருக்கனூர் முதல் மணலிப்பட்டு வரை மெயின்ரோடு மற்றும் காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள முக்கிய வீதிகளும் அடங்கும்.

உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை பின்பற்ற வலியுறுத்தி புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் தலைமை செயலருக்கு 11.4.2023ம் தேதியில் கடிதம் அனுப்பியிருந்தேன். அதற்கு எந்தவித பதிலும் தலைமை செயலாளர் அளிக்கவில்லை. இதனால் கடந்த 11.5.2023ல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளை அகற்றக் கோரி சட்டப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் புதுச்சேரி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவை ஏற்காமல் இருப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும். எனவே புதுச்சேரி அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர், உச்ச நீதிமன்றம் உத்தரவை புதுச்சேரி அரசு பின்பற்ற உறுதியான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x