Published : 16 Jun 2023 11:20 AM
Last Updated : 16 Jun 2023 11:20 AM

அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கிறார் ஆளுநர்: முத்தரசன் குற்றச்சாட்டு

இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அரசை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் எனத் தொடங்கி நடத்தி வரும் சோதனை தாக்குதல் அவரது அதிகாரபூர்வமான அரசு இல்லத்திலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கும் சென்றுள்ளது.

“எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க தயார்” என அவர் அறிவித்த நிலையிலும் சட்ட முறைகளை நிராகரித்து, மனித உரிமைகளை அலட்சியப்படுத்திய அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அமைச்சர், உயிருக்கு போராடி வரும் நிலையில் அவரது சட்டபூர்வ கடமைகளை கவனிக்கும் பொறுப்பை அமைச்சரவை உறுப்பினர்களிடம் முதல்வர் பிரித்து வழங்கியுள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் முதல்வர் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் சட்டப்படியான கடமைப் பொறுப்பாகும். ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு எதிராக அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் வன்மத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழக மக்களை தவறாக வழிநடத்தும் உள்நோக்கம் கொண்ட குறிப்புகளுடன் முதல்வர் கடிதத்தை திருப்பி அனுப்பி உள்ளார்.

ஆளுநரின் அப்பட்டமான அதிகார அத்துமீறலையும், மலிவான அரசியல் நடவடிக்கையையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் + பாஜக ஆதரவு அரசியலை ஆளுநர் மாளிகையில் இருந்து நடத்துவதை தமிழகம் வினாடிப் பொழுதும் அனுமதிக்காது என்பதை உணர வேண்டும் என எச்சரிக்கை செய்கிறது" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x