Published : 12 Oct 2017 11:43 AM
Last Updated : 12 Oct 2017 11:43 AM
சித்த மருத்துவ முறையில் டெங்கு கொசுக்களை ஒழிக்கக் கூடிய அரிய வகை மூலிகை தாவரங்களை வீடுகளில் வளர்த்து நோய் பாதிப்பு ஏற்படாமல் மக்கள் தங்களை காத்துக் கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலத்தைச் சேர்ந்த பாரம்பரிய சித்த மருத்துவர் தங்கதுரை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் நண்ணீரில் உருவாகிறது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் தட்டை அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து, உயிர் இழப்பு வரை கொண்டு செல்லும். தற்போது, தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க கூடிய அரிய தாவரங்கள் உள்ளன. மூலிகை தாவரமான நிலவேம்பு (சிறியாநங்கை) குடிநீர், பப்பாளி இலைச்சாறு ஆகியவை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
முறையான சிகிச்சை தேவை
டெங்கு பாதிப்பு ஏற்பட்டதும் வாந்தி, மயக்கம், பேதி, ரத்தத்தின் உரையும் தன்மை குறைந்து, தட்டை அணுக்களின் எண்ணிக்கை சரியத் தொடங்கும். சாதாரணமாக 2 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை தட்டை அணுக்கள் ரத்தத்தில் இருக்க வேண்டும். டெங்கால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான சிகிச்சை முறை மேற்கொள்ளவில்லை என்றால், மூன்று, நான்கு நாட்களில் தட்டை அணுக்களின் எண்ணிக்கை 60 ஆயிரமாக குறைந்து, இக்கட்டான சூழலை ஏற்படுத்தும்.
அக்காலத்தில் சித்தர்கள் பல நல்ல மூலிகை தாவரங்களை பயன்படுத்தி கொள்ளை நோய் எனப்படும் காலராவை விரட்டி அடித்துள்ளனர். நோயை விரட்டியடிக்கும் பேய் மிரட்டி என்ற தாவரத்தின் பச்சை இலையை திரியாக பயன்படுத்தி விளக்கு ஏற்றினால், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீட்டுக்குள் வராது. மாநகராட்சி, நகராட்சிகள் மூலம் கொசு மருந்து அடிக்கும் புகையில் அலித்தீன் என்ற நச்சு புகை உள்ளது. இந்த புகை நுரையீரலை பாதிப்படைய வைக்கும்.
இயற்கையானது
ஆனால், பேய் விரட்டி இலையில் விளக்கேற்றும்போது வரும் புகை இயற்கையானதும், எவ்வித பாதிப்பு ஏற்படுத்தாது. ஒவ்வொரு வீட்டிலும் நிலவேம்பு, பேய் விரட்டி, ஆடாதொடை, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை ஆகிய மூலிகைச் செடிகளை வளர்த்தால், பன்றி காய்ச்சல், டெங்கு, பிளேக், மலேரியா உள்ளிட்டவைக்கு அரிய மருந்தாக பயன்படுத்தலாம்.
எனவே, தமிழக அரசு டெங்குவை தடுக்கும் நமது பாரம்பரிய மூலிகை செடிகளை வளர்க்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த தருணத்தில் சாலச்சிறந்ததாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT