Published : 16 Jun 2023 06:11 AM
Last Updated : 16 Jun 2023 06:11 AM

2047-ல் இந்தியா உலக நாடுகளை வழிநடத்தும்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ‘அக்மி-2023’ என்ற இந்தியாவின் முதன்மையான இயந்திரக் கருவிகளின் கண்காட்சியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்ன வர்த்தக மையத்தில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.நலங்கிள்ளி, அக்மி-2023 கண்காட்சியின் தலைவர் கே.சாய் சத்யகுமார், ஷங்க் இன்டெக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ் சதாசிவன் உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: 2047-ம் ஆண்டில் இந்தியா உலக நாடுகளை வழிநடத்தும் என்று தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், இந்தியாவின் முதன்மையான இயந்திரக் கருவிகளின் 15-வது சர்வதேச கண்காட்சி ‘அக்மி-2023’ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.

இதில், சர்வதேச அளவிலான 435 நிறுவனங்கள் பங்கேற்றன. வரும்19-ம் தேதி வரை, தினமும் காலை10 மணி முதல் மாலை 6.30 மணிவரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை வணிகப் பார்வையாளர்கள் காணலாம்.

இதில், தொழில் துறையை நவீனப்படுத்தும் வகையிலும், இந்தியாவில் முதலீட்டை மேம்படுத்தும் நோக்கிலும் இயந்திரக் கருவி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், நவீனக் கருவிகள்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பா, ஆசியா, அமெரிக்காஉள்ளிட்ட நாடுகள் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளதால், ரூ.650 கோடி வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கண்காட்சியை தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்து, மலரை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது: சிறு, குறு நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயல்படுவதில், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நாட்டிலேயே முன்னோடியாக இருந்து வருகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை,தொழிநுட்பத்தில் பின் தங்கியிருந்தோம். தற்போது அந்த நிலை மாறி வருகிறது.

நாடு சிறந்த நிலையை அடைந்தால் மட்டுமே, உலக அளவில் முன்னிலை வகிக்க முடியும். அதற்கேற்ப இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். நமது குழந்தைகள் செயற்கைக் கோள்களை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். 100-வதுசுதந்திர தினத்தைக் கொண்டாடும் 2047-ம் ஆண்டில், இந்தியா உலக நாடுகளை வழிநடத்தும்.

2030-க்குள் 50 சதவீதம் தூய்மையான ஆற்றலை நாம் பெற்றிருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிநாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற இலக்குகளை உருவாக்கி, அவற்றை அடைய முயல்வதுதான் புதிய இந்தியா.

இயந்திரக் கருவிகளை உருவாக்குபவர்கள், எதிர்காலத்தை நோக்கியே சிந்திக்க வேண்டும்.இந்தக் கண்காட்சி, தொழிற்சாலைகளின் எதிர்காலத்துக்கும், நாட்டின் எதிர்காலத்துக்கும் நல்ல பயனைக் கொடுக்கும் என்று அவர் பேசினார்.

தொடர்ந்து, கண்காட்சி அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த நவீன இயந்திரங்களைப் பார்வையிட்ட ஆளுநர், அவற்றின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் டி.நலங்கிள்ளி, `அக்மி -2023' கண்காட்சி தலைவர் கே.சாய் சத்யகுமார், டெய்ம்லெர் இந்தியா வணிக வாகனங்கள் நிறுவன நிர்வாக இயக்குநர் சத்யாகம் ஆர்யா, ஷங்க் இன்டெக்இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ் சதாசிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x