Published : 16 Jun 2023 04:10 AM
Last Updated : 16 Jun 2023 04:10 AM
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஷாப்பிங் செல்ல வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக, மாநகராட்சி நிர்வாகம் விரைவில் பல்லடுக்கு வாகனக் காப்பகங்களில் ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
தற்போது நகரங்களில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் பெருத்து வருகிறது. அதுவும், பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயில், நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ள மதுரை போன்ற பழைய பாரம்பரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது.
இந்நிலையில், கோயிலை சுற்றியுள்ள வணிக நிறுவனங்களில் ஒரு சிலவற்றை தவிர, மற்ற அனைத்து நிறுவனங்களிலும் வாகன நிறுத்தும் வசதி இல்லை. சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள், வெளியூரிலிருந்து வருபவர்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதுடன், ஷாப்பிங்கும் செல்கின்றனர்.
இவர்களில் பலர் வாகனங்களில் வருகின்றனர். ஆனால், இவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவான இடம் கிடைக்காமல் அலைகின்றனர். பின்னர், வேறு வழியின்றி சாலையோரங்களில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவர்களின் வசதிக்காக, தற்போது பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் பல்லடுக்கு வாகனக் காப்பகங்கள் கட்டப்பட்டு, விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.
இதில், மீனாட்சியம்மன் கோயில் பல்லடுக்கு வாகனக் காப்பகம் பரிசோதனை முறையில் திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோன்ற பார்க்கிங் வசதிகளை ஒருங்கிணைத்து, மக்களுக்கு தெரியவைத்து, அவர்கள் எளிமையாக தங்கள் வாகனத்தை பார்க்கிங் செய்வதற்கு வசதியாக, மாநகராட்சி விரைவில் ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: மாநகரில் உள்ள ‘மல்டி லெவல் பார்க்கிங்’ வசதிகள், மற்ற பார்க்கிங் இடங்களையும் ஒருங்கிணைத்து செயலி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி வலைதளத்தில் க்யூஆர் கோடு வசதியுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மாநகராட்சி வலைதளத்துக்குள் சென்றும் அல்லது செயலியை பதிவிறக்கம் செய்தும், மாநகரில் எந்த இடங்களில் பார்க்கிங் வசதிகள் உள்ளன, அங்கு வாகனங்களை விடுவதற்கு இடம் இருக்கிறதா என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம், பொதுமக்கள் எங்கு சென்றாலும் தங்களது வாகனங்களை எளிதாக, பல்லடுக்கு வாகன நிறுத்தங்கள், வாகன காப்பகங்களில் நிறுத்திக் கொள்ளலாம்.
மேலும், ஸ்மார்ட் பார்க்கிங் செயலியும், மாநகராட்சி வலைதளமும் மதுரை மாநகரில் உள்ள வாகன நிறுத்துமிடங்களைப் பற்றிய முழு தகவல்களை அளிக்கிற வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. இதில், ஒரு வாகன நிறுத்துமிடம் நிரம்பிவிட்டால், அருகிலுள்ள வாகன நிறுத்தும் இடம் குறித்த தகவலையும் இத்தொழில் நுட்பம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
பல்லடுக்கு வாகனக் காப்பக நுழைவுவாயிலில் தானியங்கி முறையில் ஸ்கேன் செய்யும் கருவி மூலம் காரின் எண் பதிவு செய்யப்பட்டு, டோக்கன் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT