Published : 14 Oct 2017 11:00 AM
Last Updated : 14 Oct 2017 11:00 AM
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மத்தாப்பு, வெடிகள் வடிவிலேயே சாக்லெட்டுகளை செய்து அசத்துகிறார் கோவையைச் சேர்ந்த சுஜாதா சிவக்குமார் (32).
கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு பகுதியைச் சேர்ந்த இவர், எம்.ஏ. ஆங்கில இலக்கியம் மற்றும் கிரியேட்டிவ் ரைட்டிங்கில் அட்வான்ஸ்டு டிப்ளமோ படித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்ஸுக்காக, சி.பி.எஸ்.இ. பாடப் பிரிவில் ஆங்கிலப் பாடத்துக்கான நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ள இவர், ஆங்கில ஆராய்ச்சிப் பிரிவு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு, பட்டாசுகள் வடிவிலான சாக்லெட்டுகளை செய்துள்ள சுஜாதா சிவக்குமார், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கடைகளில் விற்பனை செய்யப்படும் கேக், சாக்லெட்டுகளில்ரசாயனப் பொருட்கள் கலப்பு உள்ளது. இதனால், ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக படித்து அறிந்ததால், வீட்டுக்குத் தேவையான கேக், சாக்லெட்டுகளை வீட்டிலேயே செய்ய வேண்டும் என்பதற்காக அவற்றை கற்றுக் கொண்டேன்.
கோகோ, பால், சர்க்கரை ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி சாக்லெட்டுகளை செய்யத் தொடங்கினேன். இதேபோல, ரசாயனப் பொருட்கள் மற்றும் செயற்கை வர்ணங்கள் இல்லாமல் கேக் வகைகளையும் செய்தேன். வழக்கமான கேக், சாக்லெட் போல அல்லாமல் புதுமையான வடிவங்களில் அவற்றை செய்யத் தொடங்கியதால், நண்பர்கள், உறவினர்களும் தங்களுக்கு கேக், சாக்லெட்டுகள் செய்துதருமாறு வலியுறுத்தினர். ரக் ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ராக்கி வடிவிலான சாக்லெட் செய்தபோது, 500-க்கும் மேற்பட்ட சாக்லெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
சுத்தமான கோகோவில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகம். எனவே 80 சதவீத கோகோ மற்றும் சிறிது பால் பொருட்கள், சர்க்கரை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சாக்லெட்டுகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது. இதற்குத் தேவைப்படும் இயற்கையான எசன்ஸ் உள்ளிட்டவற்றை வெளிநாட்டில் இருந்து தருவித்துக் கொள்கிறேன்.
தங்கபஸ்ப கேக்
அண்மையில் தங்கபஸ்பம் அடங்கிய திருமண கேக்கை தயார் செய்தேன். இதற்காக 24 கேரட் சுத்தமான தங்கபஸ்பத்தை அமெரிக்காவில் இருந்து தருவித்தேன். இதற்கு அதிக வரவேற்பு கிடைத்து, மேலும் 4 கேக் செய்ய ஆர்டர் கிடைத்தது.
பட்டாசுகளை தவிர்க்கும் விழிப்புணர்வுக்காக, மத்தாப்பு, வெடிகள் போலவே ஹோம்மேட் சாக்லெட்டுகளை தயார் செய்கிறேன். லட்சுமிவெடி, சங்கு சக்கரம், அணுகுண்டு, பென்சில் ராக்கெட், சரவெடி, பூச்சட்டி மற்றும் தீபாவளி விளக்கு வடிவில் சாக்லெட்டுகளை செய்து, அலுமினிய காகிதத்தால் சுற்றி, அதன் மீது பட்டாசுகள் போல வடிவமைக்கப்பட்ட காகிதங்களை பொருத்திவிடுகிறேன். அந்தக் காகிதங்களை எடுத்துவிட்டு, சாக்லெட்டுகளைச் சாப்பிடலாம். ஒரு பெட்டியில் 18 வகையான சாக்லெட்டுகளை, பெப்பர்மென்ட், ஆரஞ்ச், குல்கந்து, பைனாப்பிள், காபி, ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர்களில் செய்து வைத்துள்ளேன். எவ்வித ரசாயனம், செயற்கை வர்ணங்களும் இல்லாத கோகோ டார்க் சாக்லெட்டுகள், உடலுக்கு ஆரோக்கியமானவை. இதேபோல, அடுத்துவரும் பண்டிகை, விழாக்களின்போதும் வித்தியாசமான வகையில், புதுமையான வடிவில் சாக்லெட்டுகளை செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT