Published : 22 Oct 2017 01:31 PM
Last Updated : 22 Oct 2017 01:31 PM

கே.வி.குப்பம் அருகே தரைப் பாலம் உடைப்பு: பேருந்து சேவையை நிறுத்தியதால் 10 கிராமங்கள் பாதிப்பு

கே.வி.குப்பம் அடுத்துள்ள கவசம்பட்டு, முடினாம்பட்டு, சீதாராமபேட்டை, காவனூர், ரூசா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயத்தை பின்னணியாகக் கொண்ட இவர்களின் வசதிக்காக வேலூரிலிருந்து கவசம்பட்டு கிராமத்துக்கு 17-கே என்ற ஒரே ஒரு அரசுப் பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது.

கவசம்பட்டு கிராமத்தின் அருகே பாலாறு இரண்டாகப் பிரிகிறது. கொட்டாறு என்ற பெயரில் கவசம்பட்டு, முடினாம்பட்டு வழியாக பயணித்து காட்பாடி திருமணி அருகே மீண்டும் பாலாற்றுடன் இணைகிறது. கொட்டாற்றின் குறுக்கே காமராஜர் ஆட்சிக் காலத்தில் தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த தரைப் பாலத்தின் வழியாகத்தான் அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பாலாற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேநேரம், பாலாற்றிலிருந்து கொட்டாற்றுக்கான நீர்வரத்து பாதிக்கப்பட்டது. எனவே, வெள்ளநீரை கொட்டாற்றுக்கு திருப்பிவிட தரைப் பாலத்தின் ஒரு பகுதியை விவசாயிகள் உடைத்தனர். அதன்பிறகு கொட்டாற்றுக்கு அதிகப்படியான நீர்வரத்து கிடைத்தது. மேலும், தரைப் பாலம் உடைக்கப்பட்டதால், பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், 10 கிராம மக்கள் போக்குவரத்து வசதி இன்றி அவதிப்படுகின்றனர். தற்போது வெள்ளநீர் குறைந்துள்ள நிலையில் உடைக்கப்பட்ட தரைப்பாலத்தை சரி செய்து பேருந்தை சேவையை தொடங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து கவசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் கூறும்போது, ‘‘கே.வி.குப்பம் பகுதியில் இருந்து கவசம்பட்டு, காவனூர் உள்ளிட்ட 10 கிராம மக்களுக்கு பேருந்து வசதி கிடையாது. கே.வி.குப்பம் ரயில்வே பாலத்தின் வழியாக பேருந்து செல்ல முடியாததால், ஆட்டோ அல்லது இருசக்கர வாகனத்தில் மட்டுமே சென்று வருகிறோம். எங்களுக்கான ஒரே பேருந்து சேவை வேலூரிலிருந்துதான் இயக்கப்படுகிறது. பாலாறு இரண்டாக பிரியும் இடத்தில் மணல் கொள்ளையால் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனாலே கொட்டாற்றுக்கு நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை சரி செய்யாமல் பாலாற்றில் தண்ணீர் வரும்போதெல்லாம் தரைப் பாலத்தை உடைக்கின்றனர்.

உடைக்கப்பட்ட தரைப் பாலத்தை உடனடியாக சரி செய்து பேருந்து சேவையை தொடங்க வேண்டும். அதேபோல், கவசம்பட்டில் இருந்து இறையங்காட்டை இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே தரைப் பாலம் கட்ட வேண்டும். இது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x