Published : 15 Jun 2023 11:11 PM
Last Updated : 15 Jun 2023 11:11 PM

செந்தில்பாலாஜி அமைச்சர் பதவி | தமிழக அரசு vs ஆளுநர் ஆர்.என். ரவி - நடப்பது என்ன?

சென்னை: "31-5-23 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக கோரி ஆளுநர் முதல்வருக்கு கடிதம் எழுதினார்" என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையான அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், அவர் வகித்து வந்த மின்சாரத் துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்து, அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார் என்று தகவல் வெளியான நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவரது இல்லத்தில் அமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "31-5-23 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக கோரி ஆளுநர் முதல்வருக்கு கடிதம் எழுதினார். இதற்கு மறுநாளே தமிழக முதல்வர் ஆளுநருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதிலே, 'வழக்கு இருப்பதன் காரணத்தாலேயே அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அப்படியாக இருக்குமானால் பாஜக ஆட்சி நடத்துகிற, குறிப்பாக உள்துறை அமைச்சராக இருக்கிற அமித் ஷா மீது வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு இருக்கிற காரணத்தால் அமித் ஷா நீக்கப்பட்டாரா?, அதுமட்டுமல்ல, 33 மத்திய அமைச்சர்கள்மீது வழக்குகள் இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அவர்கள் நீக்கப்பட்டனரா" என்று மிகத் தெளிவாக முதல்வர் பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்குகள் நிலுவையில் இருப்பவர்களை எல்லாம் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று உண்மையில் ஆளுநர் ஒப்புக்கொண்டால், பாஜகவில் 33 பேரை பதவி விலக வேண்டும் என்று கடிதம் எழுதினாரா.. இல்லை.

ஆனால் இங்கே அமலாக்கத்துறை ரெய்டு கூட நடக்காத நிலையில் வழக்கு நிலுவையில் இருந்தபோதே 31-5-2023 அன்றே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் சொல்கிறார் என்றால் இதன் பின்னணி என்ன. ஆளுநர் ஒரு பாஜக பிரமுகர் போல் செயல்படுகிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தமிழக முதல்வர் காரணங்களை எல்லாம் சுட்டிக்காட்டி ஆளுநர் பதில் கடிதம் கொடுத்துவிட்டார்.

இதனிடையே, இன்று மதியம் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யவிருப்பதால் அவரிடம் இருந்த பொறுப்புகளை மின்சாரத் துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்கிறோம் என்று தமிழக முதல்வர் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

முதல்வர் சொல்பவர்களை அமைச்சர்களாக நியமிக்கும் பணியே ஆளுநருடையது. அமைச்சர்கள் இலாக்கா மாற்றம் செய்வதை எல்லாம் ஆளுநரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பதில்லை. மாற்றத்தை ஆளுநருக்கு தெரியப்படுத்தினால் போதுமானது. இதைப் பின்பற்றி ஆளுநருக்கு இலாக்கா மாற்றம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

உண்மையில் அரசியலமைப்பு சட்டத்தை தெரிந்த ஆளுநர் என்றால் உடனடியாக இதற்கு ஒப்புதல் கொடுத்திருக்க வேண்டும். மாறாக, இன்று மாலை ஆளுநர் தரப்பில் இருந்து, 'நீங்கள் சொல்லியிருக்க காரணங்கள் எல்லாம் misleading and incorrect' என்று குறிப்பிட்டு முதல்வருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநரின் கடிதத்தை அடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கு மீண்டும் காரணங்கள் மற்றும் அதிகாரங்களை விளக்கி கடிதம் எழுதியுள்ளார். மேலும், 'misleading and incorrec' என்ற வார்த்தைகள் எல்லாம் உபயோகிப்பது அரசியல் சட்டத்துக்கும் மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்று அந்த கடிதத்தில் கண்டித்துள்ளார்.

ஆளுநர் கடிதத்தை ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறோம். தமிழக ஆளுநர் பாஜகவின் ஏஜென்ட்டாக செயல்படுவது இந்த கடிதங்கள் மூலம் உறுதியாகியுள்ளன. தனது அதிகாரத்துக்குட்பட்டு செயல்படும் முதல்வராக தமிழக முதல்வர் உள்ளார். ஆனால் ஆளுநர் தான் தேவையில்லாமல் தமிழக அரசின் அதிகாரங்களில் தலையிட்டு பாஜகவின் ஏஜென்ட்டாக செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x