Published : 15 Jun 2023 09:42 PM
Last Updated : 15 Jun 2023 09:42 PM
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு, ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி இப்போது சென்னை - காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சிறைத் துறை நிர்வாகம் அனுமதி கடிதத்தை நேரில் அளித்ததை தொடர்ந்து, அமைச்சர் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றும் பணிகள் தொடங்கின. காவேரி மருத்துவமனையில் இருந்து இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்தன. தொடர்ந்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைச்சர் செந்தில்பாலாஜி அழைத்துச் செல்லப்பட்டார். சுமாரா 10 நிமிடங்களில் காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்றடைந்தது.
இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதால் உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சையை பொறுத்தவரை, அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல் ஒத்துழைப்பு மிக முக்கியம். எனவே, முதல்கட்டமாக அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்பே அறுவை சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும் என்று மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
உயர் நீதிமன்ற அனுமதி: முன்னதாக, "நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில்பாலாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும்" என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை காலை முறையீடு செய்யப்பட்டது.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில், "செந்தில்பாலாஜி உடல்நலம் தொடர்பாக ஏற்கெனவே இரண்டு மருத்துவ அறிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க முடியாது. இஎஸ்ஐ மருத்துவர்களைக் கொண்டு மீண்டும் அவரை பரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம்" என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அமைச்சர் செந்தில்பாலாஜியை, மருத்துவ சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து உத்தரவிட்டனர். மேலும், மருத்துவர்கள் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது. மனுதாரர் கோரிக்கைப்படி, அவரது செலவில் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்குகிறோம். அதுவரை அவர் நீதிமன்ற காவலிலேயே நீடிக்க வேண்டும். மேலும் அமலாக்கத் துறை விரும்பினால், அவர்கள் தரப்பு நியமிக்கும் மருத்துவக் குழுவினர் தனியார் மருத்துவமனையில் செந்தில்பாலாஜியின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து பரிசோதனை செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில், செந்தில்பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதால், மருத்துவ சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் இருந்த நாட்களாக கருதக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நீதிமன்ற காவலில் செந்தில்பாலாஜி இருக்கும்போது, அவர் சிகிச்சைப் பெற்ற நாட்களை கணக்கில் கொள்ளக் கூடாது. சிகிச்சைக்குப் பிறகு வரும் நாட்களை நீதிமன்ற காவல் என்று கணக்கில் கொள்ள வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, அமைச்சர் செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மற்றும் இடைக்கால ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 16) ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | அதன் விவரம்: நீதிபதியின் கேள்விக்கு காணொலியில் பதிலளித்த செந்தில்பாலாஜி - ED வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT