Published : 15 Jun 2023 08:20 PM
Last Updated : 15 Jun 2023 08:20 PM
மதுரை: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதால், தமிழகத்தில் பாஜகவினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துகளை பதிவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.
அதேநேரத்தில், செந்தில்பாலாஜி கைதை சமூக வலைதளங்களில் பாஜகவினர், வலதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். செந்தில்பாலாஜி குறித்து கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ மற்றும் செந்தில்பாலாஜி நெஞ்சுவலியால் அழுவதை கிண்டல் செய்தும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பாஜகவினர் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு திமுகவினரும் கடுமையாக பதிலளித்து வருகின்றனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் சமூக வலைதளங்களில் திமுகவினரும், பாஜகவினரும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் தமிழகத்தில் பாஜகவினர் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் பாஜக நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள தகவலில், 'பாஜகவினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தேவையில்லாமல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையிலும், கடுமையான விமர்சனங்களையும் பதிவிடக் கூடாது. சற்று அமைதியாக இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவலை நிர்வாகிகள் அனைத்து மாவட்ட, மண்டல கட்சியினருக்கு தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பாஜக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் ஆர்வமாக செயல்படும் பாஜகவினருக்கு அனுப்பி வருகின்றனர்.
முன்னதாக, “தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!” என்று கூறி ஒரு வீடியோ பதிவை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதன் விவரம்: திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT