Published : 15 Jun 2023 05:57 PM
Last Updated : 15 Jun 2023 05:57 PM

செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்: ஆளுநரிடம் அதிமுக மனு

ஆளுநருடன் அதிமுகவினர் சந்திப்பு

சென்னை: செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக சார்பில் வியாழக்கிழமை நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28-ம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக மூத்த நிர்வாகிகள் வியாழக்கிழமை மாலை சந்தித்தனர். அதிமுக மூத்த நிர்வாகிகளான சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநரை சந்தித்து செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

இது தொடர்பாக சி.வி.சண்முகம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில்பாலாஜி அமைச்சராக தொடருவது சட்டத்துக்குப் புறம்பானது. அரசியலமைப்புக்கு முரணானது. இது தொடர்ந்தால் இந்திய ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படும். அவர் கைது செய்யப்பட்ட உடனே, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால், செந்தில்பாலாஜியை தியாகியைப் போல முதல்வரும், அமைச்சர்களும் சித்தரித்து கொண்டு இருக்கிறார்கள்.

குற்றவாளி செந்தில்பாலாஜியை முதல்வர் காத்துக்கொண்டு இருக்கிறார். இது தவறான செயல். போக்குவரத்துத் துறையில் ஊழல் செய்தது தொடர்பாக, அதிமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். என் தலைமையில் ஆட்சி அமைந்தால் செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவார் என்று முதல்வர் கூறினார். மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x