Published : 15 Jun 2023 03:17 PM
Last Updated : 15 Jun 2023 03:17 PM
புதுச்சேரி:தனது ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை அபகரித்தவர்களிடமிருந்து அதனை மீட்டுத்தரக் கோரி புதுச்சேரி பேரவைக்கு வந்த முதல்வர் காலைப் பிடித்து கிராமத்துப் பெண்மணி ஒருவர் கதறி அழுதார். அப்போது அப்பெண்மணியின் சகோதரர் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
பெட்ரோல் பாட்டிலில் இருந்து சில துளிகள் முதல்வர் வேட்டியிலும், காலிலும் பட்டுள்ளது. இதனால் முதல்வரின் பாதுகாப்பினை உறுதி செய்ய சட்டப்பேரவை காவலர்கள் தவறிவிட்டனரா விசாரணை நடத்தப்படுகிறது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று காலை தனது கார் மூலம் சட்டப்பேரவைக்கு வந்தார். அவர் படிக்கட்டில் ஏறியபோது கோர்காட்டைச் சேர்ந்த பெண்மணி தவமணி, அவரது சகோதரர் மாசிலாமணி ஆகியோர் நின்றிருந்தனர்.
அப்போது கதறி அழுதபடி தவமணி முதல்வர் காலை பிடித்துக்கொண்டார். அந்நேரத்தில் மாசிலாமணி தன் கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து தன் மீது பெட்ரோலை ஊற்றினார். அதில் சில துளிகள் முதல்வர் வேட்டியிலும், காலிலும் பட்டன. தனது ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகவும் தன்னையும் தனது குடும்பத்தையும், சொத்தையும் காப்பாற்றும் படி கதறி அழுதார்.
அவர் சத்தம் கடுமையாக எழுந்ததைத் தொடர்ந்து போலீஸார் மற்றும் சட்டப்பேரவை காவலர்கள் உள்ளே ஓடி வந்து சூழலைப் பார்த்து அவர்கள் இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். முதல்வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அப்போது முதல்வர் அப்பெண்ணின் புகாரை விசாரிக்கும்படி தெரிவித்தார்.
முதல்வரின் காலைப் பிடித்திருந்த பெண்ணை, பெண் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தி சட்டப்பேரவை வாசலில் வைத்து விசாரித்தபோது, "எனது ஒரு ஏக்கர் நிலத்தை வழக்கறிஞர் தரப்பில் சிலர் அபகரித்துள்ளனர். மங்கலம் போலீஸில் புகார் தந்தும் நடவடிக்கை இல்லை. அதனால் சட்டப்பேரவைக்கு குடும்பத்துடன் வந்தோம். நடவடிக்கை இல்லாததால் தீக்குளிக்க முயன்றோம்" என்றார்.
அவர்களிடம் விசாரித்த காவல் கண்காணிப்பாளர் வீரவல்லவன், ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் போலீஸார் தங்களை அலைக்கழிப்பதாக தெரிவித்து செல்ல மறுத்தனர். அவர்களை சமாதானப்படுத்தி பின்னர் வில்லியனூர் எஸ்.பி. அலுவலகத்துக்கு போலீஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர். காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, "மங்கலம் போலீஸில் இரு தரப்பிலும் புகார் தரப்பட்டது. இரு தரப்பு ஆவணங்களையும் வருவாய்த்துறை, பதிவாளர் துறை ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ளோம்" என்றனர்.
முதல்வர் முன்பாக தீக்குளிப்பு முயற்சி சம்பவம் என்பதால் எஸ்எஸ்பி நாரா சைதன்யா, எஸ்.பி. வம்சிரெட்டி ஆகியோர் நேரில் வந்து விசாரித்தனர். அதிக மக்கள் நடமாட்டமும், சட்டப்பேரவைக் காவலர்கள் அதிகமுள்ள வளாகத்தினுள் ஆறு லிட்டர் பெட்ரோலுடன் கிராமத்திலிருந்து குடும்பத்தினர் உள்ளே வந்தது எப்படி என்று விசாரித்தனர். பெட்ரோலுடன் வந்தோரை சோதிக்காமல் சட்டப்பேரவை காவலர்கள் அனுமதித்தது எப்படி என்று விசாரிக்க அறிவுறுத்தினர். இந்நிலையில் சட்டப்பேரவை காவலர்கள் அதிகளவில் உள்ள சூழலில் பாதுகாப்பு குறைபாடு எப்படி ஏற்பட்டது. முதல்வர் முன்பாக பெட்ரோல் ஊற்றிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சட்டப்பேரவை செயலர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT