Published : 15 Jun 2023 01:32 PM
Last Updated : 15 Jun 2023 01:32 PM
சென்னை: சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில் மடிப்பாக்கம் ராம்நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. இதற்கிடையே மழைக் காலங்களில் வேளச்சேரி, மடிப்பாக்கம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பது வாடிக்கையாக உள்ளது. அதிலும் மடிப்பாக்கம் ராம்நகர், சதாசிவம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதிகள் இல்லாமல் இருந்ததால் சிறிய மழைக்கே தெருக்களில் கழிவுநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கும்.
சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடுவதுடன், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். அதிலும் பருவமழை காலங்களில் ராம்நகர் மக்களின் நிலை திண்டாட்டம்தான். இதனால் மழை என்றாலே ராம்நகர் பகுதி மக்களை பதற்றம் பற்றிக் கொள்ளும். எனவே, மழைநீர் வடிகால் வசதியை அமைத்து தர வேண்டுமென நீண்டகாலமாக அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையேற்று மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் தென்சென்னை பகுதியில் விரிவாக்கப்பட்ட ராம்நகர், மடிப்பாக்கம், குபேர நகர், ராஜேஷ் நகர், காரப்பாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் ரூ.1,714 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி 2021-ம் ஆண்டு டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த திட்டத்துக்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு பணிகள் கடந்தாண்டு தொடங்கப்பட்டன.
அந்தவகையில் ராம்நகர், சதாசிவம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே திட்டப் பணிகள் மந்தமாக நடைபெறுவதால் அந்தப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், தோண்டிய பள்ளங்களை சுற்றி முழுமையான தடுப்புகளும் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
கே.ராஜேஷ் குமார், மருத்துவர்: ராம்நகரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். ஒருநாள் மழைக்குகூட இந்தப் பகுதி தாங்காது. அதற்காக மழைநீர் வடிகால் அமைப்பது வரவேற்கத்தக்கது. எனினும், முறையான திட்டமின்றி வேலைகள் மேற்கொள்ளப்படுவதால் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு தெருவில் பணிகளை முடிப்பதில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதை பாதியில்விட்டு அடுத்த பகுதிக்கு சென்று விடுகின்றனர்.
அதற்காக தோண்டப்பட்ட குழிகளையும் தற்காலிகமாக மூடாமல் பெயருக்கு சில தடுப்புகள் மட்டும் அமைக்கின்றனர். இதனால் அதில் பல்வேறு சமயங்களில் நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, கால்வாய் அமைத்தலை மாநகராட்சி விரைந்து முடிப்பதுடன், பணிகளையும் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் மேற்கொள்ள வேண்டும்.
மாரியம்மாள், மளிகை கடை: வீட்டு வாசலில் பள்ளம் தோண்டி பணி நடக்கிறது. இந்த பள்ளத்தை தாண்டி வீட்டுக்குள் வந்து செல்ல சிறிய பலகை மட்டுமே வைக்கப்படுகிறது. இதனால் முதியோர்கள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமுள்ளது. அதனால் கால்வாய் பள்ளங்களை சுற்றி தடுப்புகள் அமைப்பதுடன் வீடு, தெருவை இணைப்பதற்கு தடிமனான பெரிய பலகையை வைக்க வேண்டும்.
மோகன், ஒய்வுபெற்ற அரசு ஊழியர்: ராம்நகரில் இருந்து தொடங்கி சதாசிவம் நகர் வழியாக இணைத்து கால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புவியியல் அமைப்பின்படி ராம்நகர் மற்றும் அதை சுற்றிய பகுதிகள் முன்பு நீர்நிலைகளாக இருந்ததால் மழைநீர் முழுமையாக வெளியேற நேரமாகும்.
மழைநீர் வடிகால் அமைத்தாலும் இது எந்தளவுக்கு பலன் தரும் என்று தெரியவில்லை. மேலும், இந்த வடிகால் வேளச்சேரி பாலத்தை ஒட்டிய கால்வாயுடன் இணைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதற்கு மாற்றாக மடிப்பாக்கம் ஏரியில் நீரை சேமிக்க அரசு முன்வர வேண்டும்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் மடிப்பாக்கம்- வேளச்சேரி பிரதான சாலையில் ஏற்கெனவே நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பல்வேறு பகுதிகளாக பிரித்து செய்துவருகிறோம். எனவே, திட்டப் பணிகளில் எவ்வித சுணக்கமும் இல்லை. மழை, தொலைத்தொடர்பு இணைப்பு, மின் இணைப்பு கேபிள்கள் இடையூறு உள்ளிட்டவற்றால் மட்டுமே பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
மற்றபடி தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்படும் பள்ளங்களை சுற்றி முழுமையாக தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. ஏதேனும் இடத்தில் இல்லாமல் இருப்பதை மக்கள் தெரிவித்தால் உடனடியாக தடுப்புகள் அமைக்கப்படும்’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT