Last Updated : 15 Jun, 2023 04:23 PM

 

Published : 15 Jun 2023 04:23 PM
Last Updated : 15 Jun 2023 04:23 PM

கிருஷ்ணகிரி | பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையால் பெண்கள், மாணவிகள் அச்சம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளி, வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் பெத்தாளாப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.பூசாரிப்பட்டி கிராமத்தில் தானம்பட்டி செல்லும் சாலையில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.

இக்கடைக்கு மது அருந்த வருபவர்களால், குடியிருப்பு மக்கள் பல்வேறு இன்னல்களை, சந்தித்து வருவதாகவும், எனவே, டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பானு மற்றும் மற்றும் சிலர் கூறியதாவது: எங்கள் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறோம். குறிப்பாக டாஸ்மாக் கடைக்கு அருகில் தனியார் பள்ளி, மசூதி, சர்ச் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளன. டாஸ்மாக் கடை இருக்கும் பகுதி வழியாகப் பள்ளிக்கு மாணவ, மாணவிகள், வேலைக்கு பெண்கள் சென்று வருகின்றனர்.

மது குடிக்க வருவோர் பெண்கள் மற்றும் மாணவிகளைக் கிண்டல் செய்வதால், அச்சத்துடன் இப்பகுதியைக் கடக்கும் நிலையுள்ளது. மேலும், மது அருந்துவோர்களிடையே அடிக்கடி ஏற்படும் தகராறில் உயிரிழப்புகளும் நடந்துள்ளது. சிலர் மதுபாட்டிலை வாங்கி வந்து இங்குள்ள வீட்டின் முன்பு அமர்ந்து குடித்து விட்டு, பாட்டிலை வீட்டின் முன்பு உடைத்து வீசி வருகின்றனர்.

குடிபோதையில் செல்லும் சிலர் இங்குள்ள வீட்டின் கதவுகளைத் தட்டி தகராறில் ஈடுபடுகின்றனர். இதேபோல, மது அருந்திவிட்டு அதிவேகமாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களால் விபத்துகளில் சிக்கி பலர் படுகாயம் அடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி பலமுறை மனு மற்றும் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை.

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x