Published : 15 Jun 2023 11:24 AM
Last Updated : 15 Jun 2023 11:24 AM

நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய செந்தில்பாலாஜி மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

செந்தில்பாலாஜி | கோப்புப் படம்.

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவலை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஏற்கெனவே நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுவிட்டதால் அதை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முன்னதாக, அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை நேற்று (ஜூன் 14) கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28-ம்தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதிகோரிய வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. அதேபோல் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.

எப்படி இருக்கிறார் செந்தில்பாலாஜி? சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்று இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. அவருக்கு மூன்று ரத்தக்குழாய்களில் 90 சதவீதம் அடைப்பு இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஒருவேளை அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் ஆயின் அது சென்னை அப்பல்லோ மருத்துவமனை அல்லது காவேரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவருக்கும் வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி: இதற்கிடையில் இன்று காலையில் மருத்துவமனையில் உள்ள செந்தில்பாலாஜியை சந்திக்க அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்றிருந்தார். ஆனால் செந்தில்பாலாஜியை சந்திக்க அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, "செந்தில்பாலாஜியை சந்திக்க எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நான் அவருக்கு சிகிச்சையளிக்கு மருத்துவர்களை சந்தித்து செந்தில்பாலாஜியின் உடல்நிலை பற்றிக் கேட்டறிந்தேன். அவரது உறவினர்களிடமும் பேசினேன். செந்தில்பாலாஜிக்கு விரைவாக உரிய சிகிச்சைகளை வழங்குமாறு அறிவுறுத்துகிறேன்" என்றார்.

இந்நிலையில் செந்தில்பாலாஜியை அவரது குடும்பத்தினர் மட்டுமே சந்திக்கலாம் என்று அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் செந்தில்பாலாஜியை தற்போது மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் சந்தித்தார். செந்தில்பாலாஜி கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்று நேற்று சட்ட அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று செந்தில்பாலாஜியை கண்ணதாசன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "செந்தில்பாலாஜி கைது நடவடிக்கையின் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் விசாரிக்க வந்தேன். மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கவும் உரிமை உள்ளது. செந்தில்பாலாஜியிடன் பேசியபோது அவர் தன்னை கைது செய்தபோது காவலர்கள் இழுத்துச் சென்றதாகவும் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார். தன்னைத் தாக்கியவர்கள் பெயர்களையும் அவர் கூறியுள்ளார். அவர் சற்று சோர்வாகக் காணப்பட்டார். நெஞ்சு வலி இருப்பதாகக் கூறியதால் அதிகம் பேச இயலவில்லை எனக் கூறினார்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x