Published : 15 Jun 2023 04:14 AM
Last Updated : 15 Jun 2023 04:14 AM

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரிய வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு அளிக்க உள்ளது.

அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28-ம்தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரியும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி கோரியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல, அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத் துறை சார்பில் விசாரணை அதிகாரியான துணை இயக்குநர் கார்த்திக் தேசாரியும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோவும், அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனும், அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷும் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், "ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகளை, அமலாக்கத் துறையினர் முறையாகப் பின்பற்றவில்லை. ஹிட்லர் ஆட்சி நடப்பதுபோல, அரசியல் உள்நோக்கத்துடன் செந்தில் பாலாஜியைக் கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியுள்ளனர். அவரைக் கைது செய்தது தொடர்பாக, யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.

அவருக்கு இதயத்தில் 3 இடங்களில் அடைப்புகள் இருப்பதாகமருத்துவர்கள் சான்று அளித்துள்ளதால், உடனடியாக அவரை காவேரி மருத்துவமனையில் சேர்த்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அதற்கு அமலாக்கத் துறை சார்பில், "நேற்று பகல் 1.39 மணியளவில் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டது குறித்து அவரிடமும், அவரது மனைவி மற்றும் சகோதரருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அவர்கள் செல்போன் இணைப்பைத் துண்டித்து விட்டனர்.நேற்று முன்தினம் அவரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்கான சம்மனைக்கூட அவர்வாங்க மறுத்து விட்டார். அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். நடைப்பயிற்சி செல்லும்போது உடல் ஆரோக்கியத்துடன் இருந்த செந்தில் பாலாஜி, திடீரென நெஞ்சுவலி என்றுகூறி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு முறைகேடுகளை செய்து, தகுதியில்லாத பலருக்கும் பணிநியமனம் வழங்கியுள்ளார். பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். அவர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. எனவே, அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே, இந்த வழக்கின் உண்மை நிலவரம் தெரியவரும். அவரை வெளியே விட்டால், சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்று வாதிடப்பட்டது. அதற்கு செந்தில் பாலாஜிதரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான அமலாக்கத் துறையின் மனு மீது இன்று (ஜூன் 15) காலை தீர்ப்பு அளிப்பதாகவும், பின்னர், ஜாமீன் உள்ளிட்ட பிற மனுக்கள் குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்து, விசாரணையை தள்ளிவைத்தார்.

ஆட்கொணர்வு மனு...: இதற்கிடையில், செந்தில் பாலாஜியை சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கோரியும் அவரது மனைவி மேகலா சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார்.ஆனால் நீதிபதி ஆர்.சக்திவேல் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று தெரிவித்ததால், நேற்று மாலை இதுகுறித்து தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா முன்னிலையில் முறையிடப்பட்டது.

இதையடுத்து, நேற்று மாலை வேறு ஒரு அமர்வில் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x