Published : 15 Jun 2023 05:02 AM
Last Updated : 15 Jun 2023 05:02 AM

மனிதநேயமற்ற முறையில் செந்தில் பாலாஜிக்கு அமலாக்க துறை நெருக்கடி - கைதுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக செந்தில்பாலாஜி கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத் துறை நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்காதது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

இதுதவிர, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையிலும் சோதனை நடைபெற்றது. சோதனையை தொடர்ந்து, அதிகாலை 1.30 மணிக்கு செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அதன்பின் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை முதல்வர், அமைச்சர்கள் வந்து பார்த்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், கைது நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து மனிதநேயமற்ற முறையில் பாஜகவின் அமலாக்கத் துறை நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது.

தன்வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும் என ஏற்கெனவே கூறியிருந்தேன். அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் நேற்று முன்தினம் காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார்.

இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி, அனுமதியின்றி பலவந்தமாக, தமிழகத்தின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தியுள்ளனர்.

தலைமைச் செயலகத்திலேயே புகுந்து ரெய்டு நடத்துவோம் என்பதை காட்ட நினைத்துள்ளனர். இதை நான் மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள கட்சித் தலைவர்களும், பல்வேறு மாநில முதல்வர்களும் கண்டித்துள்ளனர்.

விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில்பாலாஜியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது. நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கின்றனர். நள்ளிரவு வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார்.

இந்த வழக்குக்கு தேவையான சட்ட நடைமுறைகளை மீறி அமலாக்கத் துறை அதிகாரிகள் இவ்வளவு மனிதநேயமற்ற முறையில் நடந்துகொண்டிருப்பது ஏன்? அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன்மூலம் வெளிப்படுகிறது.

என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில்பாலாஜி சந்திப்பார். எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாக தொடர்வோம். இந்த வழக்கை சட்டரீதியாக திமுக உறுதியுடன் எதிர்கொள்ளும். பாஜகவின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது. இந்த அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x