Published : 15 Jun 2023 05:10 AM
Last Updated : 15 Jun 2023 05:10 AM

அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் - உள்நோக்கம் கொண்டது என விமர்சனம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்: கடந்த சில வாரங்களாக செந்தில் பாலாஜி மீது குறிவைத்து நடத்தப்படும் சோதனை தாக்குதலால் அவர் மன உளைச்சலுக்கும், அலைச்சலுக்கும் ஆளாகி மனஅழுத்தம் அதிகரித்து கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திமுக அரசை மிரட்டும் பாஜக அரசின் அதிகார அத்துமீறல் நடவடிக்கையை கண்டிக்கிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டது, திமுகவை பழிவாங்குவதாக இருப்பதுடன், மிரட்டி பணிய வைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இத்தகைய அச்சுறுத்தும் அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: அமலாக்கத் துறை விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்தும்கூட, விசாரணை முடிந்து, எந்தவிதமான சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல் நள்ளிரவில் அவரைக் கைது செய்து துன்புறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஜனநாயகத்தில் இத்தகைய மிரட்டல் போக்குகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை.

விசிக தலைவர் திருமாவளவன்: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்திருப்பது, திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. பாஜக அரசு தம்மைப்பகைத்துக்கொள்ளும் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துவதற்காக கையாளும் ஒரு அரசியல் உத்தியேஇது போன்ற கைது நடவடிக்கை. இப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: அமலாக்கத் துறை விசாரணைக்கு செந்தில் பாலாஜி தொடக்கத்திலிருந்து முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்த நிலையில், தலைமை செயலகத்துக்கு வந்து சோதனையில் ஈடுபடுவதை, திமுக ஆட்சி மீது மக்களுக்கு அவப்பெயரை உருவாக்கும் உத்தியாகக் கருத வேண்டி உள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன்: அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் பெற்று, திருப்பி தராமல் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடிகளின் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகக் கூறிய செந்தில் பாலாஜியை கைது செய்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x