Published : 15 Jun 2023 06:15 AM
Last Updated : 15 Jun 2023 06:15 AM
சென்னை: தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் அகிலஇந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சிமையத்தில், மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதுடன், ஆர்வலர்கள் தங்களை தேர்வுக்குத் தயார்படுத்திக்கொள்ளும் வகையில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. கடந்த மே 28-ம் தேதி நடைபெற்ற குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதிய தேர்வர்களில் 31 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் பெண்கள்.
குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை 3 மாதங்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெறும் 3 மாதத்துக்கும் ஊக்கத் தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
பயிற்சி மையத்தில் சேர விரும்புவோர் இன்று (ஜூன் 15) காலை 10 மணி முதல் 17-ம் தேதி மாலை 6 மணி வரை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூன் 19, 20 தேதிகளில் சேர்க்கை நடைபெறும். 21-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.
அரசு விதிகளுக்கு உட்பட்டு பதிவு செய்தவர்களில் 225 பேர் தேர்வு செய்யப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தலைமை செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT