Published : 28 Oct 2017 12:51 PM
Last Updated : 28 Oct 2017 12:51 PM
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. மூன்று நாள் தேவர் ஜெயந்தி விழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி 8,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர்களில் ஒருவருமான முத்துராமலிங்கத் தேவர் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குரு பூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் இருக்கும் தேவர் நினைவிடத்தில் சனிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தங்க கவசத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ச. நடராஜனிடம் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒப்படைத்தார். அதை பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்திற்கு எடுத்து வந்த ஆட்சியர் ச.நடராஜன் அமைச்சர்கள் உதயகுமார், மணிகண்டன் முன்னிலையில் தேவர் சிலைக்கு அணிவித்தார்.
கோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமி ஆன்மிக விழாவை இன்று தொடங்கி வைக்கிறார். ஞாயிற்றுக்கிழமை அரசியல் விழா நடைபெறும்.திங்கட்கிழமை தேவர் ஜெயந்தி, குரு பூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் குரு பூஜையை முன்னிட்டு 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பசும்பொன்னிற்கு வாடகை வாகனங்களில் வந்து அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை. ஒரு ஏ.டி.ஜி.பி,4 ஐ.ஜி.க்கள், 4 டி.ஐ.ஜி.க்கள்,17 எஸ்.பி.க்கள்,22 ஏ.டி.எஸ்.பி.க்கள்,60 டி.எஸ்.பி.க்கள் உட்பட எட்டாயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
11 அவசர ஊர்திகள், 10 மீட்பு வாகனங்கள்,10 தீயணைப்பு வாகனங்கள், 9 மருத்துவக் குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. காவல் துறை சார்பாக 50 நடமாடும் நான்கு சக்கர வாகனங்கள், 42 இரு சக்கர வாகனங்கள், 65 அதிவிரைவுப் படை வீரர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் அனைத்திலும் இரவு, பகலாக ரோந்துப் பணியில் ஈடுபடுவர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 83 சமுதாயத் தலைவர்களின் சிலைகளுக்கும் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பசும்பொன் கிராமத்தில் மட்டும் 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் அதிநவீன கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக ரவுடிகளை அடையாளம் காட்டும் கருவிகள் பசும்பொன்னில் 8 இடங்களில் அமைக்கப்பட உள்ளது என்றார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கமுதி, முதுகுளத்தூர், கடலாடி வட்டங்களில் உள்ள அனைத்து மதுக் கடைகளையும், பரமக்குடி வட்டத்தில் பார்த்திபனூர், பாம்பூர், சூடியூர், தோளுர் மற்றும் கமுதக்குடியில் அமைந்துள்ள அரசு மதுக்கடைகள் முறையே 6945, 6811, 6959, 6924, 6941 மற்றும் 6943 ஆகிய மதுக் கடைகளை அக்.29-ம் தேதி மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுக் கடைகள், மதுக்கூடங்கள், எஸ்.எம்.ஓய். லாட்ஜ், எப்.எல்.4-ஏ உரிமம் பெற்ற மண்டபம் கடலோரக் காவல் படை மற்றும் உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து வளாகத்தில் இயங்கும் மதுபான நிலையங்களை அக்.30-ம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT