Published : 15 Jun 2023 04:07 AM
Last Updated : 15 Jun 2023 04:07 AM
வேலூர்: திருவள்ளுவர் பல்கலையில் விடைத் தாள் மதிப்பீட்டுக்கான மதிப்பூதியம் மற்றும் தேர்வு தொடர்பான பணி களுக்கான அகவிலைப்படி, பயணப்படி தொகை உயர்த்தாமல் இருப்பதால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க உள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், தேர்வு முடிவுகள் வெளி யாவதில் தாமதம் ஏற்படும் என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வேலூர் அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், திருவண் ணாமலை மாவட்டங்களில் செயல்படும் 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சுமார் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 2002-ம் ஆண்டில் இருந்தே சர்ச்சைகள், முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, தேர்வுத்துறை குளறுபடிகளால் மாணவர்கள் அடிக்கடி பாதிக்கப் படுகின்றனர். பல்கலையில் மாணவர் களுக்கான தேர்வு கட்டண விகிதங்கள் பல மடங்கு உயர்ந்த நிலையில் பேராசிரியர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கான மதிப்பூதியம் மற்றும் தேர்வு தொடர்பான பணிகளுக்கான அகவிலைப்படி, பயணப் படிக்கான தொகை உயர்த்தப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் விரைவில் தொடங்க உள்ள விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக பேராசிரி யர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வரும் பேராசிரியர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘திருவள்ளுவர் பல்கலையில் ஒவ்வொரு பருவத் தேர்வுக்கும் சுமார் 8 லட்சம் விடைத்தாள்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்களால் திருத்தப்படுகின்றன. ஒவ்வொரு விடைத்தாள் திருத்தும் பணிக்காக மதிப்பூதியமாக இளநிலை பாடப்பிரிவாக இருந்தால் ரூ.12 எனவும், முதுநிலை பாடப் பிரிவாக ரூ.15 வழங்கு கின்றனர்.
இளநிலை பாடப்பிரிவில் ஒரு பேராசிரியருக்கு ஒரு நாளைக்கு 50 விடைத் தாள்களையும், முதுநிலை பாடப்பிரிவாக இருந்தால் 40 விடைத் தாள்களையும் திருத்த வேண்டும். கடந்த 2013-ம் ஆண்டு உயர்த்தப் பட்ட மதிப்பூதிய தொகையை உயர்த்த வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டு முதல் கேட்டு வருகிறோம். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உள்ளது. மதிப்பூதிய உயர்வுக்கு தமிழ்நாடு மாநில உயர்கல்விக் குழுமம் அனுமதி வேண்டும் என்ற இல்லாத புதிய விதியை தெரிவிக்கின்றனர்’’ என்றனர்.
திருவள்ளுவர் பல்கலையில் கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு முதலா மாண்டு மாணவர் பதிவு கட்டணம் ரூ.268-ல் இருந்து ரூ.750 ஆனது. இளநிலை பாடப் பிரிவுகளுக்கு ஒரு தாள் கட்டணம் ரூ.68-ல் இருந்து ரூ.90 ஆகவும், முதுநிலை படிப்பு பாடப்பிரிவுகளுக்கு ஒரு தாள் ரூ.113-ல் இருந்து ரூ.145 ஆனது.
மதிப்பெண் கட்டணம் ரூ.38-ல் இருந்து ரூ.75 ஆகவும், ஒட்டுமொத்த பாடங்களின் மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் இளநிலை படிப்புக்கு ரூ.375-ல் இருந்து ரூ.750 ஆகவும், முது நிலை படிப்புக்கு ரூ.450-ல் இருந்து ரூ.900ஆகவும் உயர்ந்தது. பட்டப்படிப்பு சான்றிதழ் ரூ.225-ல் இருந்து ரூ.600 ஆகவும், இளநிலை படிப்பில் விடைத்தாள் மறு மதிப்பீடு ஒரு தாளுக்கு ரூ.200-ல் இருந்து ரூ.400 ஆகவும், முதுநிலை படிப்பில் ஒரு தாளுக்கு ரூ.400-ல் இருந்து ரூ.800 ஆகவும் உயர்ந்துள்ளதாக பட்டியல் நீள்கிறது.
இந்த பிரச்சினை குறித்து, திருவள்ளுவர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் ஆன்டணி பாஸ்கரன் கூறும்போது, ‘‘விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு தொடர்பான பணிகளுக்கான மதிப்பூதியம் உயர்த்துவது தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் முன்னிலையில் கடந்த ஜனவரி 30-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது, பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவின் ஒப்புதல் பெற்று உயர்த்தப்படும் என தெரிவித்தனர். அதன் பிறகு இரண்டு முறை ஆட்சிமன்ற குழு கூடியும் விடைத்தாள் மதிப்பீடு மற்றும் தேர்வு தொடர்பான பணிகளுக்கான மதிப்பூதியம் உயர்த்தப்படாமல் உள்ளது.
எங்கள் கோரிக்கையாக இளநிலை படிப்பில் ஒரு தாளுக்கு ரூ.16-க்கு அதிகமாகவும், முதுநிலை படிப்பில் ஒரு தாளுக்கு ரூ.20-க்கு அதிகமாகவும் வழங்க வேண்டும். பாரதியார் பல்கலையில் கடந்த 2019 முதல் இளநிலை பாடப் பிரிவுகளுக்கு ரூ.16, முதுநிலை பாடங்களுக்கு ரூ.20 என வழங்கப்படுகிறது. பெரியார் பல்கலையில் இளநிலை படிப்பு ஒரு தாளுக்கு ரூ.15, முதுநிலை படிப்பில் ஒரு தாளுக்கு ரூ.18 வழங்குகின்றனர்.
திருவள்ளுவர் பல்கலையில் விடைத்தாள் திருத்தும் பணிக்கான மதிப்பூதியம் உயர்த்தாததால் பல்கலைக்கு உட்பட்ட தன்னாட்சி கல்லூரிகளிலும் மதிப்பூதியம் உயர்த்த மறுக்கின்றனர். அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணிக்கான முன்பணம் வழங்குவதிலும் பல்கலைக்கழக நிர்வாகம் தாமதம் செய்கின்றது.
தனியார் கல்லூரிகளில் ஏதாவது ஒரு நிதியை பயன்படுத்துகின்றனர். ஆனால், அரசு கல்லூரிகளில் எங் கிருந்து பணம் கொடுக்க முடியும். எங்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு கல்விக்குழு மற்றும் ஆட்சிமன்ற குழுவில் எங்களுக் கான பிரதிநிதிகள் யாரும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இல்லை. கல்விக்குழுவில் இடம் பெற வேண்டிய பேராசிரியர் பிரதிநிதிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தாமல் உள்ளனர். இதனால், ஆட்சிமன்ற குழுவிலும் பேராசிரியர் பிரதிநிதிகள் இடம் பெற முடியவில்லை.
கல்விக்குழுவில் பேராசிரியர் பிரதிநிதிகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் பல்கலைக்கழகம் நிலுவையில் வைத்திருக்கிறது. கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க உள்ளோம். அந்த நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT