Published : 14 Jun 2023 09:20 PM
Last Updated : 14 Jun 2023 09:20 PM
சென்னை: சிலவகை வழக்குகளுக்கென சிபிஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. இதன்படி மத்திய புலனாய்வுத் துறை, தமிழத்தில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழக அரசின் முன் அனுமதியை பெற்று விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, (Delhi Special Police Establishment Act, 1946 Central Act XXV of 1946) ன் பிரிவு 6ன்படி வகுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1989 மற்றும் 1992ம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழக அரசு திரும்ப்பெற்று ஆணையிட்டுள்ளது. இதன்படி மத்திய புலனாய்வுத் துறை, தமிழத்தில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழக அரசின் முன்அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற, ஆணையினை ஏற்கெனவே மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலங்கான போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை நள்ளிரவில் கைது செய்தனர். இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT