Published : 14 Jun 2023 07:34 PM
Last Updated : 14 Jun 2023 07:34 PM

செந்தில்பாலாஜி கைது முதல் வாதங்கள் வரை நடந்தது என்ன? - ED சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் பேட்டி | HTT Exclusive

இடது - மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி | வலது - லஅமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ்

அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது. இது குறித்து அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அளித்த சிறப்புப் பேட்டி: "நேற்று நள்ளிரவு 1.40 மணியளவில், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ஒத்துழைப்பு வழங்காததாலும், அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக கோரிய சம்மனை பெற மறுத்ததாலும், விசாரணை ஆவணங்களில் கையொப்பமிட மறுத்ததாலும், அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ள முயற்சித்ததாலும், செந்தில்பாலாஜியை கைது செய்ய வேண்டிய நிலைக்கு அமலாக்கத் துறை தள்ளப்பட்டது.

ஆனால், கைது செய்யப்போகிறோம் என்று சொன்னவுடன், அமைச்சர் செந்தில்பாலாஜி அழ ஆரம்பித்துவிட்டார். தரையில் புரண்டு நெஞ்சு வலிப்பதாக கூறி கதற ஆரம்பித்துவிட்டார். எனவே, வேறு வழியின்றி அவரை அருகில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அந்த நேரத்தில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல் நலம் நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர் பயப்படுவதாலும், பதற்றம் அடைவதாலும் அவரது ரத்த அழுத்தம் காணப்படுவதாக மட்டுமே தெரிவித்தனர்.

ஆனால், இன்று காலையில், அதன்பிறகு சூழ்நிலை மாறி, செந்தில்பாலாஜிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும், அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை தேவைப்படுவதாகவும் சொல்லப்பட்டது. இதனால், மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் குழு வந்து, செந்தில்பாலாஜியை பார்த்தனர். ஆனால், செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து அவர்கள் வேறு விதமாக கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், செந்தில்பாலாஜியின் மனைவி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அது ஒரு பக்கம். அமலாக்கத் துறை சார்பில் சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்ட வழக்குக்காக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், செந்தில்பாலாஜியை ரிமாண்ட் செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனுடன் சேர்த்து, செந்தில்பாலாஜி தற்போது மருத்துவமனையில் இருப்பதால், நீதிபதி தயைகூர்ந்து மருத்துவமனைக்கே வந்து அவரை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட அமர்வு நீதிபதி, சுமார் 3.30 மணியளவில், அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரித்தார். அப்போது செந்தில்பாலாஜி இயல்பாக பேசினார். அமலாக்கத் துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்தார். அப்போது அவரிடம், ‘உங்களை எந்த வழக்கில் கைது செய்துள்ளனர் என்று தெரியுமா?’ என்று நீதிபதி கேட்டதற்கு, தெரியும் என்று செந்தில்பாலாஜி கூறினார். அமலாக்கத் துறை சம்மன் கொடுத்ததாகவும் சொன்னார்.

அதன் அடிப்படையில், அவரது புகாரை பதிவு செய்துகொண்ட நீதிபதி, அவரை 28.6.2023 வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதாக தெரிவித்தார். அதன்பிறகு, செந்தில்பாலாஜியின் வழக்கறிஞர் அதே இடத்தில் நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவதை எதிர்த்து ஒரு மனுவும், பிணை கோரி ஒரு மனுவும் தாக்கல் செய்தார். நீதிமன்றக் காவலை நிராகரிக்க கோரிய மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

‘செந்தில்பாலாஜி கைதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. சட்டமுறைப்படியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எந்தவிதமான துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை. அவர் நல்லபடியாக நடத்தப்பட்டார். அவர் உடல்நலக்குறைவு என்று கூறியதும் அமலாக்கத் துறை அதிகாரிகள்தான் அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இதில் எந்த விதிமீறலும் இல்லை என்பதால், அவரை ரிமாண்ட் செய்ய வேண்டும்’ என்று அமலாக்கத் துறை தரப்பில் அங்கேயே வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ரிமாண்டை நிராகரிக்க கோரிய மனுவை ஏற்க மறுத்து மருத்துவமனையில் இருந்து சென்றுவிட்டார்.

பின்னர், 5 மணியளவில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் கோரி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கிட்டத்தட்ட 50 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் குழுமினர். அந்த மனுவில், என்னென்ன காரணத்துக்காக இடைக்கால ஜாமீன் வேண்டும் என்பது குறித்து வாதிட்டனர்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் மற்றும் அவருக்கு உதவியாக நானும் ஆஜராகி, நிலைமையை எடுத்துரைத்தோம். மேலும், செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தரப்பிலும் மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த மனு மீதான விசாரணையை நீதிபதி வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளார்.

மற்றபடி, செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்தெல்லாம் செந்தில்பாலாஜி தரப்பில் வாய்மொழியாக கேட்கப்பட்டது. அது தொடர்பாக நீதிபதி எதுவும் சொல்லவும் இல்லை. செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x