Published : 14 Jun 2023 06:29 PM
Last Updated : 14 Jun 2023 06:29 PM

செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் விசாரிக்க கோரிய அமலாக்கத் துறை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விசாரணை நடத்தினார்.

சென்னை: செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 15) ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, திமுக சார்பில் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரியும், ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கும் அவர் காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதிக்க கோரியும், செந்தில்பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரியும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல், செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செந்தில்பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். ஏற்கெனவே விசாரணை என்ற பெயரில் 22 மணி நேரம் துன்புறுத்தப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அப்போது, அமலாக்கத் துறை தரப்பில், சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தைப் பொறுத்தவரை, குற்றவியல் நடைமுறை சட்ட விதிகள் பொருந்தாது. கைதுக்கான மெமோவை பெற செந்தில்பாலாஜி மறுத்துவிட்டார். நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் அதை நிராகரிக்க கோர முடியாது என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, 15 நாட்கள் செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். காவலில் எடுக்க கோரிய மனு மீதான விசாரணை நிலுவையில் இருப்பதால், இடைக்கால ஜாமீன் கோரிய மனு மீது நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

பின்புலம் என்ன? - அதிமுக ஆட்சியில், 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்து கழகத்தில்வேலை வாங்கி தருவதாக கூறிபலரிடம் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை தொடக்கத்தில் இருந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையிலும், வருமான வரித் துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனையின் அடிப்படையிலும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததா என்று கண்டறியும் வகையிலும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அரசு இல்லம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x