Published : 14 Jun 2023 05:01 PM
Last Updated : 14 Jun 2023 05:01 PM
வாணியம்பாடி / ஆம்பூர்: வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் தோல் கழிவுகளும், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பாலாற்றின் வளம் முழுமையாக பாதிக்கப்படுகிறது.
இதனை, மாவட்ட சுற்றுச்சூழல் துறையினர் தடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் தோல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் வகையில், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.
ஆம்பூர் அடுத்த பெரியவரிக்கம் மற்றும் மளிகை தோப்பு பகுதிகளில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ முறை பின்பற்றப்பட்டு வருவதாக தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விதிமுறைகள் மீறப்பட்டு ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளையொட்டியுள்ள பாலாற்றில் தோல் கழிவுநீர் திறந்து விடப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அது மட்டுமின்றி தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் தோல் கழிவுகளும், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி கழிவுகளும் பாலாற்று பகுதியிலும், கிளை ஆறுகளிலும் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக இயற்கை ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவு பாலாற்றில் பகிரங்கமாக கொட்டப்படுகிறது.
இரவு நேரங்களில் தோல் தொழிற்சாலைகளுக்கு சொந்தமான வாகனங்களில் கொண்டு வரப்படும் தோல் கழிவுகள் பாலாற்றில் கொட்டப்படுகின்றன. ஆம்பூர் ஏ - கஸ்பா பகுதியையொட்டியுள்ள பாலாற்றில் தோல் கழிவுகள் டன் கணக்கில் குவிந்துள்ளன. 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டு வரப்படும் தோல் கழிவுகள் 10 ஏக்கர் பரப்பளவில் பாலாற்றில் கொட்டப்பட்டுள்ளன. இதனால், பாலாற்றின் வளம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. கர்நாடக மாநிலத்தில் தொடங்கி நீண்ட நெடிய தொலைவு பயணித்து வரும் பாலாற்றின் புனிதமும் வரலாறும் மெல்ல மாறத்தொடங்கி கழிவுநீர் பாலாறாக உருமாறத்தொடங்கியுள்ளது. மழைக் காலங்களில் தோல் கழிவுகள் மழைநீரில் கலந்து ஆற்று வெள்ளத்தில் கலக்கிறது.
குடிநீர் ஆதாரத்துக்காக பாலாற்றில் பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, தண்ணீர் உறிஞ்சப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.தோல் கழிவுகள் தண்ணீரில் கலந்து வருவதால் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு மக்கள் ஆளாகின்றனர். இந்த தண்ணீரை பருகும் பொதுமக்களுக்கு தோல் அரிப்பு, கண் எரிச்சல், முடி உதிர்தல், வயிற்றுப்போக்கு, சரும நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பாலாற்றை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவுகளும், திரவக்கழிவுகளும் பாலாற்றில் கொட்டப்படுவதால் பாலாறு மேலும் பாழ்பட்டு வருவது வேதனையளிக்கிறது.
மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பெயரளவுக்கு ஆய்வு நடத்துகின்றனர். பாலாற்றின் வளத்தை காப்பாற்றும் வகையில் பாலாற்று பகுதியில் அடிக்கடி ஆய்வு நடத்தி தோல் கழிவுகளை பாலாற்றில் கொட்டி வரும் தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை பின்பற்றாத தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான உரிமத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ரத்து செய்து சம்பந்தப்பட்ட தொழிற் சாலைகளுக்கு ‘சீல்' வைக்க வேண்டும். வாணியம்பாடி பகுதியில் உள்ள பாலாற்று பகுதியிலும் தோல் கழிவுகளும், மாட்டிறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதையும் தடுத்து வளமான பாலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது’’ என்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, "தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தோல் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் மாதந்தோறும் ஆய்வு நடத்தி வருகிறோம். பாலாற்றில் தோல் கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் விதி மீறும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இறைச்சிக்கழிவுகள் கொட்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT