Published : 14 Jun 2023 05:51 PM
Last Updated : 14 Jun 2023 05:51 PM
திருநெல்வேலி: மின்கோபுரங்களில் மின்சாரத்தை நிறுத்தாமலேயே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பழுதுகளை நீக்கவும் திருநெல்வேலி மண்டலத்தில் ஹாட்லைன் உபகோட்டம் தொடங்குவது எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்திட்டத்துக்கு கடந்த மார்ச் மாதத்திலேயே அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மின் கோபுரங்களில மின்சாரத்தை நிறுத்தாமலே, பராமரிப்பு பணிகள் மற்றும் பழுதுகளைசரி செய்ய ஹாட் லைன் (Hotline) உபகோட்டங்கள் தமிழகத்தில் தற்பொழுது சென்னைகொரட்டூர், திருவலம், கோவை, திருச்சி,மதுரை என்று 5 இடங்ளில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டுள்ளது. இந்த ஹாட்லைன்உபகோட்டங்களில் பணியாற்ற மின்வாரியத்தில் பிரத்யேகமாக பணியாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.
இதற்காக மத்திய அரசு சார்பில் ஓராண்டு காலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மின்பாதைகளில் மின்சாரத்தை நிறுத்தாமலேயே பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் அரிய தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஹாட்லைன் வசதியை தமிழகத்தில் மற்ற இடங்களிலும் தொடங்க மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி விழுப்புரம், திருவண்ணாமலை, கரூர், தஞ்சாவூர், சேலம், திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் ஹாட்லைன் உபகோட்டங்களை உருவாக்க கடந்த மார்ச் 8-ம் தேதி அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியது. இதற்காக தலா ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி வழங்கி 3 மாதங்கள் கடந்தும் ஹாட்லைன் உபகோட்டம் உருவாக்கப்படவில்லை.
பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சார விநியோகத்தை உறுதி செய்யவும், பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்யவும் திருநெல்வேலி மண்டலத்தில் ஹாட்லைன் வசதியை உருவாக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எப்போது தொடங்கும்: ஹாட்லைன் பிரிவு எப்போது தொடங்கப்படும் என்று இத்துறையில் சிறப்பு பயிற்சி பெற்றவரான கயத்தாறு மின்வாாரிய உதவி செயற்பொறியாளர் (மின் பாதைகள்) பி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: ஏற்கெனவே சென்னை, திருச்சி, கோவை, மதுரையில் ஹாட்லைன் உபகோட்டங்கள் செயல்படுகின்றன.
புதிதாக 6 கோட்டங்களை உருவாக்க அரசு அனுமதி அளித்துள்ளது. திருநெல்வேலி மண்டலத்தில் எந்த இடத்தை தலைமையிடமாக கொண்டு இதை உருவாக்குவது என்பது குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஹாட்லைன் பிரிவில் உரிய பயிற்சி முடித்த, தொழில்நுட்பம் தெரிந்த, ஆர்வமுள்ள பணியாளர்கள் மற்றும் அலுவலர்களை மட்டுமே பணியமர்த்த முடியும். எனவே இதில் பணியாற்ற விருப்பமுள்ளதா ? என்பது குறித்து, குறிப்பிட்ட பயிற்சி முடித்த பணியாளர்களிடம் விருப்பம் கேட்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அது சென்னையிலுள்ள தலைமையிடத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டபின் ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்படும். மின்சாரம் இருக்கும்போதே மின்பாதையில் பணியாற்றுவது என்பது சவாலானது மட்டுமின்றி உயிரைப் பணயம் வைத்துதான் பணியாற்ற வேண்டியிருக்கும். எனவே இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் காப்பீடு புதுப்பிக்கப்பட வேண்டும்.
உரிய உபகரணங்களை வழங்க வேண்டும். உரிய தொழில்நுட்ப அறிவு உடையவர்களே பணியாற்ற முடியும் என்பதால் தொழிலாளர்களின் விருப்பம் கேட்கப்படும். இன்னும் 3 மாதங்களில் ஹாட்லைன் வசதி திருநெல்வேலி மண்டலத்தில் வந்துவிடும் என்று நம்பலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். திருநெல்வேலி மண்டலத்தில் மின்வாரியத் தில் ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டால் தடையின்றி மின்விநியோகம் செய்யவும், பராமரிப்பு பணிகள் எளிதாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT