Published : 14 Jun 2023 03:43 PM
Last Updated : 14 Jun 2023 03:43 PM
சென்னை: "தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் எல்லாம் தனது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி, அமலாக்கத் துறை, சிபிஐயின் மூலம் எதிர்க்கட்சிகாரர்களை அச்சுறுத்தி வந்த ஒன்றிய அரசு, அதன் தொடர்ச்சியை தமிழகத்தில் தொடங்கியுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கையின் மூலம், தமிழக அரசை மிரட்டி பார்க்க நினைக்கிறது" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார் .
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தும், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், அவரை வலுக்கட்டாயமாக கைது செய்வது சர்வாதிகாரத்தின் உச்சம். அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் பெற்று, திருப்பி தராமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடிகளின் மீது நடவடிக்கை எடுக்க துப்பற்ற ஒன்றிய அரசு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறிய செந்தில் பாலாஜியை கைது செய்ய நினைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
பாஜகவை சேர்ந்த எம்பி, பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மல்யுத்த வீரர்கள் கண்ணீர் மல்க தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்திய ஒன்றியத்தையே, உலக நாடுகள் கைக்கொட்டிக் சிரிக்கிறது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முன்வராத ஒன்றிய அரசு, செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்வது அதிகார அத்துமீறலாகும்.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் எல்லாம் தனது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி, அமலாக்கத்துறை, சிபிஐயின் மூலம் எதிர்க்கட்சிகாரர்களை அச்சுறுத்தி வந்த ஒன்றிய அரசு, அதன் தொடர்ச்சியை தமிழகத்தில் தொடங்கியுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கையின் மூலம், தமிழ்நாடு அரசை மிரட்டி பார்க்க நினைக்கிறது.
ஆனால், பாஜக ஒன்றிய அரசின் எண்ணம் தமிழகத்தில் செல்லுபடியாகாது; ஈடேறாது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழகத்துக்கு வந்து சென்ற அடுத்த நாளே, செந்தில் பாலாஜி அவர்களை கைது செய்யும் நடவடிக்கை என்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை வாயிலாக கைது செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஒன்றிய அரசின் சர்வாதிகார போக்கை, அதிகார அத்துமீறலை, தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT