Published : 14 Jun 2023 06:27 AM
Last Updated : 14 Jun 2023 06:27 AM

இயற்கை மருத்துவ படிப்பு கலந்தாய்வு தொடங்கப்படும்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகத்தின் கீழ் உள்ள தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை பகிர்ந்தளிப்பு தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்தது.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறைஆணையர் மைதிலி. கே.ராஜேந்திரன், இணை இயக்குநர்கள் மணவாளன், பார்த்திபன் மற்றும் தனியார் கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் 17 தனியார் யோகாமற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டுக்கான 993இடங்கள் மற்றும் 2 அரசு கல்லூரிகளில் 160 இடங்கள் என மொத்தம் 1,153 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 17 தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 557 இடங்கள் தமிழக அரசின் தேர்வுக் குழுவினரால் நிரப்பப்பட்டு வருகிறது. மொத்தம் 1,710 இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம்தொடங்க வேண்டிய வகுப்புகள், மாணவர் சேர்க்கை தாமதமாவதால், பிப்ரவரி மாதம் வரை தள்ளிப்போவதாக தனியார் கல்லூரிகளின் நிர்வாகிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால், நீட் தேர்வு முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டாம். 12-ம் வகுப்பு முடிவுகள் வந்தவுடனே கலந்தாய்வு நடத்த அனுமதிக்கலாம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x