Published : 14 Jun 2023 06:53 AM
Last Updated : 14 Jun 2023 06:53 AM
சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்துள்ளது அமலாக்கத் துறை. தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் சென்னை - ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, எ.வ.வேலு, ரகுபதி ஆகியோர் அவரை பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? முன்னதாக, அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்த நிலையில், செந்தில்பாலாஜியின் உதவியாளரான விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத் துறையின் 3 அதிகாரிகள், இந்தியன் வங்கியின் 2 அலுவலர்கள் ஆகியோர் மத்திய ரிசர்வ் படையின் அதிவிரைவு காவலர்கள் பாதுகாப்புடன் சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேற்று பிற்பகல் வந்தனர். ரிசர்வ் படை காவலர்கள், வளாகத்திலேயே நிற்க, அதிகாரிகள் மட்டும் முதல்வர் அலுவலகம் அருகே உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறைக்கு சென்றனர்.
அவரது உதவியாளரின் உதவியுடன் கணினி மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். வங்கி பரிமாற்றம் தொடர்பான ஆய்வு என்பதால், வங்கி அலுவலர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர்.
தகவல் அறிந்து, தலைமைச் செயலக பாதுகாப்பு பிரிவில் உள்ள உயர் அதிகாரிகள், பொதுத் துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். நேரம் ஆக ஆக, பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியர்கள், செய்தியாளர்கள் அதிக அளவில் கூடியதால் பரபரப்பான சூழல் உருவானது. மாலை 4.45 மணி அளவில் ஒரு அதிகாரி மட்டும் புறப்பட்டுச் சென்ற நிலையில், மற்றவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
கடந்த 2016 டிசம்பரில், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் வீடு மட்டுமின்றி, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். தற்போது தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரிவாக வாசிக்க: அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தது அமலாக்கத் துறை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT