Published : 14 Jun 2023 06:02 AM
Last Updated : 14 Jun 2023 06:02 AM
சென்னை: வனத்துறை களப்பணியாளர்கள், விலங்கின மீட்பு உள்ளிட்ட பயன்பாட்டுக்காக சார்பில் ரூ.12.30 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வனத்துறை சார்பில், வனத்துறை களப்பணியாளர்கள் பயன்பாட்டுக்காக ரூ.2.42 கோடி செலவில் 200 மின்சார இருசக்கர வாகனங்கள், ரூ.4.63 கோடி மதிப்பில் 50 பொலிரோ வாகனங்கள், வன உயிரின அவசர மீட்புப் பணிகள் மற்றும் காயமுற்ற வன உயிரினங்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க ரூ. 5.25 கோடியில் தனிச்சிறப்புடன் வடிவமைக்கப்பட்ட 35 மீட்பு மற்றும் மறுவாழ்வு வாகனங்கள் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
35 மாவட்டங்களில் பயன்பாடு: முன்களப் பணியாளர்கள் தொலைதூர பகுதிகளைப் பார்வையிடவும், ரோந்து செல்லவும் இந்த மின்சார இருசக்கர வாகனங்கள் பெரிதும் உதவும். மேலும், வனவிலங்கு பகுதிகளில் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தனிச்சிறப்புடன் மீட்பு மற்றும் மறுவாழ்வு வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை 35 மாவட்டங்களில் பயன்படுத்தப்படும்.
முன்களப் பணியாளர்களை, மனித வனவிலங்கு மோதல் பகுதிகள் மற்றும் காட்டுத்தீ பரவும் இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த வாகனங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
நவீன கருவிகள்: இரவு நேரத்திலும் விலங்கு மீட்புக்கு உதவும் வகையில் வாகனங்களில் தேடல் விளக்குகள், ஜிபிஎஸ் மற்றும் ஒலிபெருக்கி கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா.மதிவேந்தன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுப்ரத் மஹாபத்ர, தலைமை வன உயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ரா.ரெட்டி, தலைமை திட்ட இயக்குநர் இ.அன்வர்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT