Published : 14 Jun 2023 08:00 AM
Last Updated : 14 Jun 2023 08:00 AM
சென்னை: கூவம் ஆறு சீரமைப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சேத்துப்பட்டு ஸ்பர்ட்டாங் சாலை, சூளைமேடு ஆகிய இடங்களில் கூவம் ஆற்றுக்குள் வரும் கழிவுநீரை இடைமறித்து வடிகால் மூலம் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சென்று சுத்திகரித்து வெளியேற்றப்படுகிறது. இதுபோல பல இடங்களில் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டம், கேசவரம் என்ற கிராமத்தில் கல்லாற்றின் கிளையாக கூவம் ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு சென்னை நகரில் மட்டும் 20 கிலோ மீட்டர் ஓடுகிறது. ஒரு காலத்தில் இந்த நதி நீர் குடிநீராகவும், பாசனத்துக்கும் பயன்பட்டது.
நாளடைவில் நகர்மயமாதல் காரணாக ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்பட்டதாலும், குப்பை போன்ற திடக்கழிவுகள் கொட்டப்பட்டதாலும் கூவம் ஆறு பெரிதும் மாசுபட்டது. சென்னை மெரினாவில் நேப்பியர் பாலம் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. கூவம் ஆறு மாசுபட்டதால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி உள்ளிட்ட சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன. இதனால் சென்னைவாசிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இந்த நிலையைப் போக்கி, கூவம் ஆற்றை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு காலக்கட்டங்களில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, அதன்மூலம் கூவம் நதி, அடையாறு உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதையடுத்து பொதுப்பணித் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக மேம்பாட்டு இயக்ககம், சென்னைக் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஆகியன கூவம் ஆறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, கூவம் ஆற்றை தூர்வாருதல், எல்லையை நிர்ணயித்தல், வேலி அமைத்தல், திடக்கழிவுகளை அகற்றுதல், ஆற்றின் இருபுறமும் நடைபாதை, சைக்கிள் பாதை, குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கான பூங்காக்கள் அமைத்தல், கூவம் ஆற்றங்கரைகளில் குடியிருந்தவர்களை அப்புறப்படுத்தி அவர்களை மறுகுடியமர்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து கூவம் ஆற்றுக்குள் விடப்படும் கழிவுநீரை தடுத்து சேகரித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரித்து ஆற்றில் விடுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கூவம் ஆறு சீரமைப்பில் சென்னை குடிநீர் வாரியத்தின் பணிகள் மொத்தம் 15 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு ரூ.186.19 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, வடிகால் மூலம் நேரடியாக கூவம் ஆற்றுக்குள் செல்லும் கசடு மற்றும் கழிவுநீரை இடைமறித்து உரிய சுத்திகரிப்புக்குப்பின் ஆற்றில் வெளியேற்றுவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நேப்பியர் பூங்கா, சேத்துப்பட்டு ஸ்பெர்ட்டாங் சாலை, நுங்கம்பாக்கம் சாலை, மேத்தா நகர், அண்ணா நகர், லாங்ஸ் கார்டன் சாலை, தெற்கு கூவம் சாலை, அமைந்தகரை, என்.எஸ்.கே.நகர் ஆகிய இடங்களில் கூவம் ஆற்றுக்குள் செல்லும் கழிவுநீரை இடைமறித்து வடிகால் மூலம் சேகரித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று அங்கு சுத்திகரித்து கூவத்திற்குள் வெளியேற்றுவதற்கான பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
சூளைமேட்டில் 12 லட்சம் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. லாங்ஸ் கார்டனில் ஒரு கோடி லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நெற்குன்றத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேத்துப்பட்டு ஸ்பர்ட்டாங் சாலையில் கூவம் ஆற்றின் கரையோரம் 10 லட்சம் திறன் கொண்ட தொகுப்பு முறை இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் ரூ.3.29 கோடியில் அமைக்கப்பட்டது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு திறந்துவைத்தார்.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் வடிகால் மூலம் சேகரமாகும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு சேகரமாகும் கழிவுநீரின் அளவுகள் மாறினாலும் தரம் சீராக பராமரிக்கப்படுகிறது. மேலும் இதன் இயக்கம் மற்றும் தரம் குறித்த சோதனைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மேற்கொள்கிறது.
இதுவரை கழிவுநீர் 6 இடங்களில் இடைமறிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீர் உந்து நிலையத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இங்கிருந்து ஆற்றின் அருகே கட்டப்பட்டுள்ள எப்.பி.பி.ஆர் தொழில்நுட்பத்திலான உயிரி சவூடு பரவல் கொண்டு கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு இரண்டு நிலை உயர் வடிகட்டிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு கூவம் நதியில் வெளியேற்றப்படுகிறது. கூவம் ஆறு சீரமைப்புக்காக 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சூளைமேட்டில் 12 லட்சம் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், சேத்துப்பட்டு ஸ்பர்ட்டாங் சாலையில் 10 லட்சம் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் செயல்பட்டு வருகிறது. மேலும் ஒரு கோடி லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் லாங்ஸ் கார்டன் கழிவுநீர் உந்து நிலையத்தின் அருகிலும் அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “இரண்டு பணிகளைத் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. இந்த பணிகளும் இந்தாண்டுக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்” என்று தெரிவித்தனர்.
"கூவம் ஆற்றுக்குள் விடப்படும் கழிவுநீரை இடைமறித்து சுத்திகரித்து ஆற்றுக்குள் விடுவது எவ்வளவு முக்கியமோ அதுபோல கூவம் ஆற்றுக்குள் குப்பைகள் உள்ளிட்ட திடக்கழிவுகள் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். அப்போதுதான் கூவம் ஆற்றை முழுமையாக சீரமைக்க முடியும்" என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT