Published : 21 Oct 2017 11:13 AM
Last Updated : 21 Oct 2017 11:13 AM

எழுத்தாளர் பொன்னீலனின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் சாகித்ய அகாடமி

கன்னியாகுமரி மாவட்டம் மணிக்கட்டிப் பொட்டலை சேர்ந்த மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பொன்னீலனின் வாழ்வியலை சாகித்ய அகாடமி நிறுவனம் 25 நிமிட வீடியோ பதிவாக பதிவு செய்துள்ளது. இது விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

‘புதிய தரிசனங்கள்’ எனும் நாவலுக்காக மத்திய அரசின் மிக உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருதை 1994-ம் ஆண்டு பெற்றவர் பொன்னீலன்.

75 வயதைக் கடந்த இவரது எழுத்துக்கள் விளிம்பு நிலை மக்களின் வலியை பேசுபவை. இவரது புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு, 22-ம் தேதி சென்னையில் வெளியிடப்பட இருக்கிறது.

இதனிடையே சாகித்ய அகாடமி நிறுவனம், பொன்னீலனின் வாழ்வியலை 25 நிமிட ஆவணப்படமாக எடுத்துள்ளது. இதற்கான எழுத்து, இயக்கம் பணியினை மேற்கொண்டு வருகிறார் எழுத்தாளர் மீரான் மைதீன். கன்னியாகுமரி மாவட்ட கலை, இலக்கிய பெருமன்ற தலைவரான இவர், ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ உள்ளிட்ட இரு நாவல்கள், மூன்று சிறுகதை தொகுப்புகளை எழுதியவர்.

மீரான் மைதீன் கூறும்போது, “ வீடியோ பதிவு பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில், சாகித்ய அகாடமியின் டெல்லி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வீடியோவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, செந்நீ நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மகேந்திரன், எழுத்தாளர் சிவசங்கரி, ஈரோடு தமிழன்பன், கொடிக்கால் ஷேக் அப்துல்லா, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கி.ரா, திலகவதி, ஜெயமோகன், தோத்தாத்ரி, தமிழ் செல்வன், இ.ரா.காமராஜ், டாக்டர்.இளங்கோவன் என தமிழகத்தின் முன்னணி ஆளுமைகள், சமூக செயற்பாட்டாளர்கள் பேசியுள்ளனர். இதனோடு பொன்னீலனின் குடும்ப உறுப்பினர்களின் பார்வையும் இடம் பெற்றுள்ளது” என்றார் அவர்.

இந்திய அளவில் இலக்கிய துறையின் மிகப்பெரிய ஆலமரமான சாகித்ய அகாடமி நிறுவனத்தின் சார்பில், கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளரின் வாழ்வியல் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படமாக்கப்படுவது படைப்பாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x