Published : 14 Jun 2023 04:05 AM
Last Updated : 14 Jun 2023 04:05 AM

மதுரை - போடி இடையே நாளை முதல் ரயில் சேவை: 4 ஜோடி ரயில்களை இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

மதுரை: மதுரை - போடி இடையே ஜூன் 15-ம் தேதி முதல் ரயில் இயக்கப்பட உள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டப் பகுதிகளில் விளையும் ஏலக்காய், மிளகு, காபி உள்ளிட்ட விளை பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 1909-ல் மீட்டர்கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போடி - மதுரை வரை 87 கி.மீ.க்கு ரயில் சேவை தொடங்கியது.

உலகப் போர் காரணமாக 1915 முதல் 1928-ம் ஆண்டு வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 முதல் 1954-ம் ஆண்டு வரை நிறுத்தப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் 1954-ம் ஆண்டு முதல் ரயில் சேவை தொடர்ந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதைகளாக மாற்றிய நிலையில், 2010 டிசம்பர் முதல் மதுரை -போடி ரயில் சேவை நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதை யாக மாற்றும் பணி தொடங் கியது.

தமிழகத்தில் இயற்கை அழகோடு வைகை ஆற்றின் கரையோரம் 87 கி.மீ. தூரத்துக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் மக்கள் வேதனை அடைந்தனர். இருப்பினும், 12 ஆண்டு களுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை - தேனி வரையிலும் ரயில் சேவையை கடந்த ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இதனால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேனி - போடி வரை 15 கி.மீ.க்கான பணி தொடர்ந்து நடந்தது. தற்போது அனைத்துக்கட்ட சோதனைகளும் நிறைவடைந்து ஜூன் 15-ம் தேதி முதல் மதுரை- போடி அகல ரயில் பாதையில் தினமும் பயணிகள் ரயில் இயக்கப்படும். மேலும் சென்னை- மதுரை துரந்தோ ரயில் நீட்டிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, போடிக்கு வாரம் (செவ்வாய், வியாழன், ஞாயிறு) 3 முறை ஒரு ரயிலும் (துரந்தோ எக்ஸ்பிரஸ்) இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், மதுரை - போடி- மதுரை மார்க்கத்தில் மதுரையில் சில முக்கிய ரயில்களை இணைக்கும் வகையில் குறைந்தபட்சம் 4 ஜோடி பயணிகள் ரயில்களை இயக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கேரளாவில் 4 ரயில்கள் - இது குறித்து பயணிகள் கூறியதாவது: 13 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை - போடிக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்குவது மகிழ்ச்சி. 2010-ல் திறக்கப்பட்ட புனலூர் - கொல்லம் - புனலூர் அகல ரயில் பாதையில் உடனே 4 ஜோடி பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் மதுரை - போடி வழித்தடத்தில் பெயரளவுக்கு ஒரே ஒரு பயணிகள் ரயில் மட்டும் இயக்கப்பட உள்ளது.

மேலும், மதுரையில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவைக்கு பெயருக்கு ஒரே ஒரு பயணிகள் ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. கேரளாவில் திறக்கப் பட்ட அகல ரயில் பாதையில் 4 ஜோடி பயணிகள் ரயில்களை இயக்கி வரும் ரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் மட்டும் வெறுமனே ஒரே ஒரு பயணிகள் ரயிலை இயக்குவதென்பது பாரபட்சமான நடவடிக்கையாகும்.

எனவே, மதுரை - போடி - மதுரை ரயில் பாதையிலும், மதுரை - பொள்ளாச்சி - கோவை - பொள்ளாச்சி - மதுரை ரயில் பாதையிலும் குறைந்தபட்சம் 4 ஜோடி பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும். இந்த ரயில்கள் காலையில் பாண்டியன், மைசூரு, காலை 11 மணிக்கு ராமேசுவரம், செங்கோட்டை, பாலக்காடு - திருச்செந்தூர், பிற்பகல் 3 மணிக்கு கோவை - நாகர்கோயில் ரயில்களை மதுரையில் இணைக்கும் வகையிலும், போடியில் இருந்தும் 4 ரயில்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x