Published : 14 Jun 2023 04:17 AM
Last Updated : 14 Jun 2023 04:17 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 26 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஒப்பந்தம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் ரூ.8 கோடி மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அமைக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் திறந்தவெளிக் கிணறு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், செண்பகத்தோப்பு சாலையில் குடிநீர் சுத்திகரிப்பு மையமும், பேயனாற்று படுகையில் நான்கு ஆழ்துளைக் கிணறுகளும் அமைக்கப்பட்டன. குடிநீரைச் சுத்திகரித்து பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சென்னையைச் சேர்ந்த ‘வாட்டர் சிஸ்டம் ஆப் இந்தியா’ என்ற நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் ஆர்.ஓ மற்றும் யு.வி (புற ஊதா கதிர் மூலம் சுத்திகரிப்பு) முறை மூலம் குடிநீரை சுத்திகரிப்பதற்காக நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி மம்சாபுரம் பேரூராட்சியில் ஒரு குடும்ப அட்டைக்கு 20 லிட்டர் வீதம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தனியார் நிறுவன ஒப்பந்தம் முடிந்த பின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டப் பொறுப்பை ஏற்க பேரூராட்சி நிர்வாகம் மறுத்தது. இதனால் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் மையம் செயல்படாமல் முடங்கியது. இது குறித்து டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மின் கட்டணம், பொறியாளர் மற்றும் ஊழியர்கள் சம்பளம் ஆகியவற்றுக்கு அதிக நிதி தேவைப்படுவதால் பேரூராட்சி நிர்வாகம் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த ஆகும் செலவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 75 சதவீதமும், 25 சதவீதம் மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் குடிநீர் சுத்திகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால் 7 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டம் செயல்படுத்தப்படாமல் முடங்கி உள்ளது.
சுத்திகரிப்பு மையத்தில் பராமரிப்பு பணிகளைக்கூட மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகம் முன்வராததால், புதர் மண்டி விஷ பூச்சிகளின் புகலிடமாக மாறி உள்ளது. இதனால் அங்குள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் சேதமடைந்து வீணாகி வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ‘மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாகச் செயல்பாடின்றி உள்ளது. தற்போது 20 லிட்டர் குடிநீர் கேனுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை கொடுத்து தனியாரிடம் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். சுத்திகரிப்பு நிலையத்தைச் சீரமைத்து குறைந்த விலைக்குப் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT