Last Updated : 10 Oct, 2017 06:49 AM

 

Published : 10 Oct 2017 06:49 AM
Last Updated : 10 Oct 2017 06:49 AM

டெல்லியில் பட்டாசு கடைகளுக்கு உச்ச நீதிமன்றம் திடீர் தடை: சிவகாசி பட்டாசு விற்பனையில் பல கோடி ரூபாய் இழப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, டெல்லியில் பட்டாசுக் கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், சிவகாசியில் பட்டாசு விற்பனையில் பல கோடி ரூபாய் விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில், நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்களும், உப தொழில்களான அச்சுத் தொழில், போக்குவரத்து, அட்டை தயாரிப்பு உள்ளிட்டவை மூலம் 3 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பட்டாசுத் தொழிலின் இலக்கு தீபாவளி பண்டிகையே.

சிவகாசியில் பட்டாசுத் தொழில் இல்லையெனில், அதை நம்பியுள்ள சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறிதான்.

பட்டாசு தொழில் நலிவு

அரசின் கடுமையான பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே பட்டாசு ஆலைகளும், பட்டாசுக் கடைகளும் தொடங்கப்படுகின்றன. ஆனாலும், நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகளால் பட்டாசுத் தொழில் அண்மைக் காலமாக நலிவடைந்து வருகிறது.

பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் காற்று மாசுபாடு ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

பாதியாக குறைந்த உற்பத்தி

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர் சங்க பொதுச் செயலாளர் மாரியப்பன் கூறியதாவது: மத்திய அரசு பட்டாசுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்ததால் ஏற்கெனவே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி இந்த ஆண்டு பாதியாகக் குறைந்து விட்டது. வட மாநிலங்களில் பட்டாசுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால், நீதிமன்றத் தடை காரணமாக வட மாநிலங்களில் இந்த ஆண்டு மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து பட்டாசுக்கான ஆர்டர்கள் கிடைக்காமல் தவித்து வந்தோம். அண்மையில்தான் ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கின.

பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக சில தொண்டு நிறுவனங்கள் தவறான பிரச்சாரம் மேற்கொள்கின்றன. இதனால், பட்டாசு விற்பனை பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதோடு, பட்டாசு வெடிக்க தடை கோரி நீதிமன்றங்களிலும் சில தொண்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்கின்றன.

ரூ. 2 ஆயிரம் கோடி விற்பனை

டெல்லியில் கடந்த ஆண்டு தீபாவளி முடிந்ததும் 11.11.2016 அன்று பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 9 மாதங்களாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 12-ம் தேதியே பட்டாசுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவில் பட்டாசுகள் பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது, பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுவதாகக் கூறி, டெல்லியில் பட்டாசு கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. அதாவது, இதுவரை பட்டாசு வாங்கியவர்கள் பட்டாசு வெடிக்கத் தடையில்லை. பட்டாசுக் கடைகள் திறக்க மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் அளவில் சிவகாசியில் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி முதல் பட்டாசுக் கடைகளைத் திறக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மட்டும் பட்டாசு விதிக்க தடை விதித்துள்ளது ஏன் என்பது தெரியவில்லை.

முறையாக, அரசு அனுமதி பெற்றும், விதிமுறைகளை கடைப்பிடித்தும் தொழில் தொடங்கி பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி வருகிறோம். ஆனால், பல கோடி செலவிட்டு பட்டாசுகளை தயாரித்து இறுதிக்கட்டத்தில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த தொழிலை விட்டுச் செல்வதை தவிர வேறு வழி இல்லை. பட்டாசுத் தொழிலும், அதை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் மக்களின் கைகளில்தான் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x