Published : 26 Oct 2017 12:10 PM
Last Updated : 26 Oct 2017 12:10 PM
கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் இசக்கிமுத்து குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையிலுள்ள கந்துவட்டி தொடர்பான வழக்கு விவரங்களை சேகரிக்க தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2 நாட்களுக்கு முன்பு, கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டனர். கந்துவட்டி கொடுமை தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த சோக சம்பவம் நடைபெற்றது என்று விசாரணையில் தெரியவந்தது.
கந்துவட்டி கொடுமையால் ஏழை மக்கள், சாதாரண தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க கடந்த 2003-ல் தமிழக அரசு கந்துவட்டிக்கு எதிரான சட்டம் கொண்டு வந்தது. இதன்படி, வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டினால் இச்சட்டத்தில் வழக்கு பதிந்து போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
மதுரை உட்பட தென்மாவட்டங்களில் கந்துவட்டி கொடுமை தொடர்பாக ஏராளமான புகார்கள் பதிவாகின்றன. கடந்த 2014 வரை மதுரையில் 408, நெல்லையில் 287, விருதுநகரில் 237 வழக்குகள் பதிவாகி இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கு ஒன்றின் விசாரணையின்போது தென்மண்டல ஐஜி அலுவலகம் தெரிவித்திருந்தது. கந்துவட்டி தொடர்பாக தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அதன் மீதான நடவடிக்கைகள் வேகம் பெறவில்லை என்று பரவலான குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், நெல்லை தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலுள்ள 1,400-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் கந்து வட்டி கொடுமைக்கு எதிராக பதிவு செய்த வழக்கு விவரங்கள் அடங்கிய பட்டியலை அனுப்பிவைக்குமாறு காவல்துறை தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட, மத்திய குற்றப் பதிவேடு போலீஸார் இதற்கான புள்ளி விவரங்களை சேகரிக்கின்றனர். மேலும், நிலுவையிலுள்ள வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கோரப்பட்டுள்ளது. இது காவல்துறையின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியது: 32 மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலையங்களில் பதிவான வழக்கு விவரங்கள் சேகரிக்கப்படும். பொதுவாக கந்துவட்டி குறித்த வழக்கு வாரத்தில் ஒன்றிரண்டு மட்டுமே பதிவாகிறது. சில புகார்கள் சமாதான பேச்சுவார்த்தையில் முடிக்கப்படலாம். எனினும், நெல்லை சம்பவத்தைத் தொடர்ந்து கந்துவட்டிக்கு எதிரான அனைத்து புகார்கள் குறித்தும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கந்துவட்டி புகார்களில் சிக்கியோர் தொடர்ந்து, அத்தொழிலில் ஈடுபட்டால் அவர்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT