Published : 13 Jun 2023 09:04 PM
Last Updated : 13 Jun 2023 09:04 PM
சென்னை: "அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற சோதனை அமைப்புகள் பாஜக ஆட்சியில் அரசியல் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன" என்று தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜக ஒன்றிய அரசு, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதும், தாக்குதல் நடத்துவதும் வழக்கமாகி விட்டது. மக்கள் விரும்பி தேர்வு செய்து அமைக்கும் மாநில ஆட்சியை தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வசப்படுத்திக் கொள்வதை அண்மை கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் அமைத்துள்ள ஆட்சி மீது களங்கம் சுமத்தும் பல்முனைத் தாக்குதல்களை நடத்தி வருவதை மக்கள் கவனித்து வருகின்றனர்.
பாஜக தமிழ்நாடு தலைவர் புனைவுக் குற்றாட்டுக்களை ஊடகங்களில் வெளியிட்டார். தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் மின்துறை அமைச்சரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளும், அலுவலகங்களும் சோதனையிடப்பட்டது. தற்போது அமைச்சரின் அதிகாரபூர்வ அரசு இல்லத்திலும், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநித்துவ ஆட்சிக்கு எதிராக தொடர் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஒன்றிய உள்துறை அமைச்சர் தமிழ்நாடு வந்து திரும்பியதும் அமைச்சர் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடப்பது ஆழ்ந்த சந்தேகத்தையும், அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்புகிறது.
அடுத்த வாரத்தில் பிஹார் தலைநகர் பாட்னாவில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து மாநாடு நடத்துவதும் 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் வகுப்பதும் நாட்டு மக்களிடம் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற விருப்பத்தை தீவிரமாக்கி எழுச்சி அலையை ஏற்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்துவதில் முனைப்புடன் செயலாற்றி வரும் தமிழக முதல்வரையும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளையும் அச்சுறுத்தும் செயலாகவே சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன.
அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற சோதனை அமைப்புகள் பாஜக ஆட்சியில் அரசியல் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஜனநாயக முறையில் அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் திறனில்லாத பாஜகவின் வன்ம வெறிபிடித்த வெறுப்பு அரசியலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு மீதான தாக்குதலை மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு முறியடிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது, என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT