Published : 13 Jun 2023 07:01 PM
Last Updated : 13 Jun 2023 07:01 PM
சென்னை: "கூட்டணிக் கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி தர்மம் நன்கு உணர்ந்தவன் நான். தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதைக் கூறியிருக்கிறேன்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து அவரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து உழைக்கும் அந்த ஒற்றை மனிதரின் வழியில், தமிழகத்தில் நேர்மையான, மக்கள் நலனுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். அந்த ஒற்றை எண்ணத்துடன், இன்று மட்டும் அல்ல என்றுமே எனது அரசியல் பயணம் தொடரும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைபட்டுள்ளேன். ஊழலின் தலைநகரம் தமிழகம் என்ற போக்கினை மாற்றி ஊழலற்ற நல்லாட்சி வழங்கிட வேண்டும் என்பதே எனது ஒற்றை ஆசை மற்றும் லட்சியம் ஆகும்.
கூட்டணிக் கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி தர்மம் நன்கு உணர்ந்தவன் நான். தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதைக் கூறியிருக்கிறேன்.
ஆங்கில நாளேடுக்கு நான் கொடுத்திருந்த பேட்டியில், உண்மைக்குப் புறம்பாக ஏதேனும் கூறியிருந்தேன் என்று யாராவது நினைத்தால், அந்தத் தவறைச் சுட்டிக்காட்டித் தெளிவுபடுத்தினால், அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதேசமயம், கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது.
எனது மனசாட்சிப்படிதான் இங்கு அரசியல் செய்ய வந்துள்ளேன். அடுத்த இருபது முப்பது வருடங்களில், தமிழகம் எவ்வாறு முன்னேறியிருக்க வேண்டும், தமிழக இளைஞர்கள், மாணவர்கள் எந்த உயரத்தை அடைந்திருக்க வேண்டும் என்பதை நோக்கித் தான் எனது அரசியல் பயணம் இருக்குமே அன்றி, குறுகிய கால லாப நோக்கங்களுக்காக, இன்றும் நாளையும் கிடைக்கும் தற்காலிக வெற்றிகளுக்காக, தமிழகத்தின் எதிர்காலம் குறித்த எனது கனவுகளை, கொள்கையை அடமானம் வைக்க எனக்கு விருப்பமில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கும் விளைவிக்கும் வகையில், பொதுவெளியில் எந்தவிதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியுமற்ற பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பியதற்கு கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. | விரிவாக வாசிக்க > ஜெயலலிதாவுக்கு எதிராக அண்ணாமலை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு: அதிமுக கண்டனத் தீர்மானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT