Published : 20 Oct 2017 04:12 PM
Last Updated : 20 Oct 2017 04:12 PM
கடந்த ஆண்டு தீபாவளி ரூ.245 கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்க, இந்த ஆண்டு ரூ.223 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. 'மதுவுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களின் விளைவாகவும், அதன் எதிரொலியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதன் எதிரொலியாகவே இந்த மாற்றம் நடந்துள்ளது. இதனால் மது அருந்துபவர்கள் குறைந்துள்ளனர்' என சிலர் கருத்து தெரிவித்தாலும், 'அப்படி எதுவும் இல்லை இங்கே கள்ள மது விற்பனை அமோகமாக நடந்திருப்பதையே இது காட்டுகிறது' என குறிப்பிடுகின்றனர் பெயர் சொல்ல விரும்பாத டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் ஆளும் கட்சி அரசியல் புள்ளிகள்.
'மதுவிலக்கு அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும். எனவேதான் அரசு நேரடியாக மதுவிற்பனையில் இறங்குகிறது என்று சொன்னதெல்லாம் அந்தக் காலம். இன்றைக்கு அரசு இயந்திரத்தின் துணையுடனே கள்ள மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அரசு கஜானாவுக்கு வரவேண்டிய பணம் கள்ள மார்க்கெட்டுக்கு செல்கிறது. அதையே இந்த தீபாவளி மது விற்பனையும் காட்டுகிறது!' என்கிறார்கள் இவர்கள். எப்படி?
தமிழகத்தைப் பொறுத்தவரை மதுக்கடைகளை குறைத்து மதுவிற்பனை நேரத்தையும் குறைத்து மதுகுடிப்பவர்கள் எண்ணிக்கையை குறைப்பதாக கடந்த சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் சொன்னது அதிமுக. அக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் 2016 மே 24 முதல் மதுக்கடைகள் பகல் 10 மணிக்கு திறந்ததை பகல் 12 மணியாக மாற்றியது. அதைத்தொடர்ந்து 500 மதுக்கடைகளும் மூடப்பட்டன.
ஜெயலலிதா உடல்நலக்குறைவு, அவரின் மரணம், தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு, அதைத் தொடர்ந்து மக்கள் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் மது விற்பனையை மிகவும் பாதித்தன. அதே சமயம் எந்த மதுக்கடைகள் மூடப்படுகிறதோ அதன் பின்னணியில் பெரும்பாலும் அந்தக் கடைக்கு அடுத்துள்ள மதுக்கடை பார் உரிமையாளரின் பங்களிப்பு மறைமுகமாக இருந்தது. ஏனென்றால் ஒரு கடை மூடப்படும்பொழுது அதற்கு அடுத்துள்ள கிராமத்து கடையில் மது விற்பனை கூடியது. அது அந்த மதுக்கடையில் பார் வைத்துள்ளவருக்கு வசதியானது.
மதுக்கடை திறந்துள்ள நேரம் (பகல் 12- இரவு 10 மணி வரை) தவிர மீதியுள்ள 14 மணி நேரமும் இந்த பார் உரிமையாளரே கள்ள மார்க்கெட்டில் மது விற்பனையில் கொழித்தார். டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளை, அரசு மதுபானக்கடை ஊழியர்களை, உள்ளூர் போலீ்ஸ் மற்றும் மதுவிலக்கு அதிகாரிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு இந்த வியாபாரம் அமோகமாக நடந்தது. அதில் மாதந்தோறும் மதுவிலக்கு பிரிவுக்கு ரூ. 20 ஆயிரம், உள்ளூர் போலீஸிற்கு ரூ.15 ஆயிரம், திடீர் ரெய்டு வருபவர்கள் வகையில் ரூ. 10 ஆயிரம், டாஸ்மாக் அதிகாரிகள் வகையில் ரூ. 10 ஆயிரம், இதுதவிர உள்ளூர் ஆளுங்கட்சி புள்ளிகளுக்கு ஒரு தொகை என எடுத்து வைத்துக் கொண்டே இந்த வியாபாரத்தை தொடர்ந்தனர் - தொடர்கின்றனர் என்பது மது விற்பனை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அறிந்த ஒன்றாகவே உள்ளது.
அந்த வகையில் இப்போதெல்லாம் ஒரு அரசு மதுபானக்கடையில் வரும் வருவாயை விட கூடுதல் வருவாயை பார் உரிமையாளர்கள் பார்த்து வருவதாக தெரிவிக்கின்றனர் கோவையில் உள்ள மதுபானக்கடை ஊழியர்கள் சிலர். அதன் காரணமாகவே இந்த ஆண்டு மது விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால் மதுவிற்பனை மூலம் அரசு கஜானாவுக்கு வந்த தொகையை விட இப்படி கள்ள மார்க்கெட்டில் விற்றவர்களிடம் போன தொகைதான் அதிகமாக இருக்கும் என்றும் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் ஒரு மதுக்கடை ஊழியர் பேசும்போது, ''பொதுவாகவே மதுக்கடைக்கு வருஷத்துக்கு 12 முதல் 15 சதவீதம் புதியவர்கள் வருவது கடந்த கால அனுபவமாக எங்களுக்கு உள்ளது. அது இந்த ஆண்டும் மாறவேயில்லை. அதேசமயம் ஜிஎஸ்டி பிரச்சினை, கட்டுமானத்தொழில்கள் நலிவடைந்துள்ளது என பார்த்தால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அதற்காக அவர்கள் குடிக்காமலே இல்லை. ஒரு ஆஃப் பாட்டில் வாங்குபவன் குவார்ட்டர் பாட்டில் வாங்காமல் இல்லை.
மதுவின் விலையும் சமீபத்தில்தான் அதிகரிக்கப்பட்டது. எங்கள் கடைக்கு அடுத்ததாக உள்ள கடை பூட்டப்பட்டிருந்தால் அதற்கு செல்பவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் வரை எங்க கடைக்கே வருகிறார்கள். மற்ற 30 சதவீதம் பேர் கண்டிப்பாக வேறு திசையில் உள்ள கடைக்கு போக ஆரம்பித்திருப்பார்கள். அதில் வாங்கும் விழுக்காடு வேண்டுமானால் 10 முதல் 20 சதவீதம் குறைந்திருக்கலாம். ஆட்கள் குறையவில்லை. எனவே இது பெரிய அளவு வியாபாரத்தை பாதிக்க வாய்ப்பில்லை.
அதேசமயம் ஒரு கடையில் 10 மணி நேர வியாபாரம் ரூ. 1 லட்சம் ஆகியிருந்தால் அதே கடையில் பார் வைத்துள்ளவர் தன் வியாபாரத்திற்காக குறைந்தபட்சம் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் 20 பெட்டிகளை வாங்கி வைக்கிறார். அதில் நாங்கள் ரூ.100க்கு விற்கும் பாட்டிலை ரூ. 150க்கு விற்கிறார். எங்கள் வியாபாரம் 10 மணி நேரம். அவர்கள் வியாபாரம் 14 மணிநேரம். அந்த பார் வைத்திருப்பவர் இந்த கடையில் மட்டும்தான் சரக்கு வாங்கி வைக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. பாண்டிச்சேரி சரக்கு, லோக்கல் சரக்கு எல்லாமே கலந்து கட்டி அடிக்கிறார். அப்படிப் பார்த்தால் அந்த கள்ளச்சரக்கு, நம் சரக்குக்கு மேலதிகம் வைத்து விற்கும் தொகை எல்லாமே அரசு மதுக்கடைக்கு வரவேண்டியவை. அப்படி கணக்குப் பார்த்தால் அரசு மது விற்பனை குறைந்ததால் குடிமகன்கள் குறைந்து விட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. அவர்கள் எல்லாம் கள்ள மதுவுக்கும், அரசு மதுவையே அதீத விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்?'' என விவரித்தார்.
ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் கூறுகையில், '' இந்த பார் வகையில் ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் மாமூல் போகிறது. அதை அவர்கள் பகுதி, வட்ட, கிளை செயலாளர்கள் வாரியாக பிரித்துக் கொடுப்பதும் நடக்கிறது. அதில் மாதந்தோறும் ரூ. 25 ஆயிரம் வரை கிளைச் செயலாளர்களுக்கு கிடைத்தது. போன வருஷம் மதுப் போராட்டம், தேசிய நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடல் பின்னணியில் வியாபாரம் சரியாக இல்லை என சொல்லி கிளைச் செயலாளர்களுக்கு கொடுத்து வந்த தொகையை ரூ. 15 ஆயிரமாக குறைத்து விட்டார்கள். இது என்ன கணக்கு? பார் நடத்துபவர்கள் மொத்தமாக வசூலித்து மாவட்ட நிர்வாகிகளுக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள். அதில் அவர்கள் எத்தனை எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு கொடுக்கிறார்கள். அது எல்லாம் வாங்குபவர்களுக்கும் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்!'' என்று கூறி முடித்துக் கொண்டார்.
இதுகுறித்து சிஐடியு கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஏ.ஜான் கூறும்போது, ''கடைகள் பல இல்லை. பல கடைகள் பழைய இடத்திலும் இல்லை. ப்ரிமியம் எம்ஜிஎம் கோல்டு, எக்ஸ் ஓ கோல்டு, எம்சி டவல், ஹனிபீ போன்ற மதுப் பிரியர்கள் விரும்பக் கூடிய சரக்குகள் சப்ளை இல்லை. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் ஏற்பட்டுள்ள சிறு, குறுதொழில்கள் தேக்கம். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலையின்மை இதெல்லாம்தான் இந்தாண்டு தீபாவளி மது விற்பனையை குறைத்துள்ளது என சொல்லலாம். மற்றபடி பாரில் மது விற்பனை, வெளிமாநிலங்களிலிருந்து வரும் மது விற்பனை எல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மதுவிலக்கு அமலாக்க அதிகாரிகள். அதற்கு ஊழியர்கள் என்ன செய்ய முடியும்?'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT