Published : 13 Jun 2023 11:38 AM
Last Updated : 13 Jun 2023 11:38 AM
கரூர்: கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சி காலத்தில் 2011 - 2015-ம் ஆண்டு காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தப்போது போக்குவரத்துக் கழகத்தில் பணி வாங்கி தருவதாகப் பணம் பெற்ற வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் மே 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றபட்டதாகக் கூறப்பட்டது.
சோதனையின் முதல் நாளில் திமுகவினர் திரண்டு வருமான வரித்துறை அதிகாரிகள், காரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மத்திய பாதுகாப்பு படையினருடன் சோதனைகள் நடைபெற்றன.
இந்நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று (ஜூன் 13ம் தேதி) 5 கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட அமாலக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய பாதுகாப்புப் படை பெண் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் இந்த வீட்டில் தான் வசிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட திமுகவினர் சிலர் அமைச்சரின் வீடு முன்பு திரண்டுள்ளனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரம் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் வீடு, மண்மங்கலத்தில் உள்ள அவரது மாமனார் வீடு, ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்பு கணினி இயக்குபவராக பணியாற்றிய சண்முகம், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்பு நேர்முக உதவியாளராக பணியாற்றிய வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்தி ஆகியோர் வீடுகள் என 6 இடங்களில் சோதனை நட த்தி வருகின்றனர்.
அசோக்குமார், கொங்கு மெஸ் மணி வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் அமலாக்கத்துறையினர் புதிதாக ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அசோக்கின் மாமனார் வீடு, அமைச்சரின் முன்னாள் ஊழியர்களின் வீடுகள் என 4 இடங்களில் புதிதாக சோதனை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT