Published : 13 Jun 2023 09:59 AM
Last Updated : 13 Jun 2023 09:59 AM
சென்னை: தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் சென்னை, கரூர் வீடுகளிலும் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் அமலாக்கத் துறையினர் இன்று (ஜூன் 13) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தச் சோதனை குறித்து காலை நடைப்பயிற்சி முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், "என்ன நோக்கத்துடன் சோதனை செய்கிறார்கள் என்றுத் தெரியவில்லை. சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். சோதனை முடிந்தபின்னர் விவரமாகப் பேசலாம். ஏற்கெனவே எனது நண்பர்கள், சகோதரர் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது என்னென்ன எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தனர். இப்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
வருமானவரித் துறையோ அல்லது அமலாக்கத் துறையோ யார் சோதனை நடத்தினாலும் முழு ஒத்துழைப்பு தரத் தயார். அவர்கள் என்ன ஆவணத்தைக் கைப்பற்றி விளக்கம் கேட்டாலும் அது பற்றி உரிய விளக்கம் தரவும் தயார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்றார்.
அமலாக்கத்துறை சோதனை: சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் ஆகியோரின் வீடுகள் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கினர்.
சென்னையில் பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது. அதேபோல் கரூரில் அமைச்சரின் பூர்வீக வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. மேலும், அவரது சகோதரர் அசோக், கொங்கு மெஸ் மணியின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர், நண்பர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, கோவை, ஹைதராபாத், கேரளா என 40 இடங்களில் அப்போது சோதனை நடைபெற்றது. ரூ.3 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. பணப் பரிவர்த்தனைகள், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
அதன் நீட்சியாகவே இன்று சென்னை, கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. கடந்த முறை வருமானவரித் துறையினர் கரூரில் சோதனையிட்டபோது திமுக தொண்டர்கள் வாக்குவாதம், கார் கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். ஆகையால் இந்த முறை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப் வீரர்கள் வந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT