Published : 13 Jun 2023 04:15 AM
Last Updated : 13 Jun 2023 04:15 AM
சென்னை: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தமிழுக்கு பதில் இந்தியை திணிக்கும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் அனைத்து குடிமக்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துவரும் நிலையில், மத்திய அரசும் அதன் நிறுவனங்களும் பிற இந்திய மொழிகளைவிட இந்திக்கு அனைத்து வழிகளிலும் தேவையற்ற மற்றும் நியாயமற்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்குகின்றன. மேலும், மக்கள் நலனுக்காக அல்லாமல், இந்தியை நம் தொண்டையில் திணிக்கவே தங்கள் மதிப்புமிக்க வளங்களைச் செலவிட விரும்புகின்றனர்.
இவ்வகையில் சமீபத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அநீதியானது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்தி பேசாத மக்களையும், இந்தி பேசாத ஊழியர்களையும் அவமதித்ததற்காக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்தியாவில் இந்தி பேசாத குடிமக்கள், தங்கள் கடின உழைப்பாலும் திறமையாலும் நாட்டின்வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தங்களின் பங்களிப்புகளை அளிக்கும்போதும், அவர்கள்இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதை சகித்துக் கொள்ளும் காலம் மலையேறிவிட்டது.
இந்தி திணிப்பை தடுத்து நிறுத்த தமிழகம், திமுக சார்பில் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம்.
மத்திய அரசில் ரயில்வே, அஞ்சல் துறை, வங்கி, நாடாளுமன்றம் என அனைத்து இடங்களிலும் மக்களை அன்றாடம் பாதிக்கும் வகையில் இந்திக்கு வழங்கப்படும் அவசியமற்ற சிறப்புநிலையை நீக்குவோம்.
நாங்கள் எங்கள் வரிகளைசெலுத்துகிறோம், முன்னேற்றத்துக்கு பங்களிக்கிறோம், எங்கள் வளமான மரபு மற்றும் இந்த நாட்டின் பன்முகத் தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். எங்கள் மொழிகள் சமமாக நடத்தப்பட வேண்டும். எமது மண்ணில் தமிழுக்கு பதிலாக இந்தியை திணிக்கும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT