Published : 13 Jun 2023 09:22 AM
Last Updated : 13 Jun 2023 09:22 AM

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்காமல் வாகனத்தை பார்க்கிங் செய்வோருக்கு கட்டணம் உயர்வு

சென்னை: சென்னையில் விமான நிலையம்முதல் விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையில் 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த வழித்தடங்களில் 42 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. 10 ரயில் நிலையங்களில் இருசக்கர வாகன நிறுத்தம் மட்டும்உள்ளது. மற்ற நிலையங்களில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயிலில்பயணிக்காமல் நிலையத்தில் உள்ளபார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திச்செல்பவர்களால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனால், மெட்ரோரயில் பயணிகள் வாகனத்தை நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல், மெட்ரோ நிலையத்தில் உள்ள பார்க்கிங்-கில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் நாளை (ஜூன் 14) முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி, இருசக்கர வாகனங்களை நிறுத்த 6 மணி நேரத்துக்கு ரூ.20-ம், 12 மணி நேரத்துக்கு ரூ.30-ம், 12 மணி நேரத்துக்கு மேல்ரூ.40-ம், சேவை நேரத்தை கடந்தால், ரூ.50-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதுபோல, நான்கு சக்கர வாகனங்களுக்கு 6 மணி நேரத்துக்கு ரூ.30-ம்,12 மணி நேரத்துக்கு ரூ.40-ம், 12மணி நேரத்துக்கு மேல் 40-ம், சேவை நேரத்தை கடந்தால் ரூ.100-ம் கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரம், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு முந்தய கட்டணமே தொடரும். அவர்களுக்கு கட்டண தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி, வாகனங்களை நிறுத்தி, மெட்ரோ ரயிலில் பயணம் செய்துவிட்டு, அதேநாளில் வாகனத்தைதிரும்ப எடுக்கும்போது, வாகனநிறுத்தம் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையை பயன்படுத்தும், மெட்ரோரயில் பயணிகள் கடந்த 30 நாட்களில்மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்தகட்டண தள்ளுபடி வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x